இன்றைக்கு பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சிலர், தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியப் படங்களில்தான் முதன்முதலில் அறிமுகமானார்கள். ஆனால், பிரபலமாக ஆனபிறகு, சிலர் அதை மறைத்து, பாலிவுட்டிலேயே அறிமுகமானதாகக் கதைவிடுவர். தென்னிந்திய மொழிகளில் அறிமுகமான பாலிவுட் நடிகைகள் யார் யார் எனப் பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராய்: ‘உலக அழகி’ப் பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் முதன்முதலில் அறிமுகமானது தமிழில் தான். மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படம்தான், ஐஸ்வர்யா ராயின் ஹீரோயின் கனவைத் திறந்து வைத்தது. மோகன்லால் ஜோடியாக அவர் நடித்தார். அதன்பிறகுதான் ஹிந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கி, பின்னாட்களில் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.
பிரியங்கா சோப்ரா: இந்த ‘உலக அழகி’யும் அறிமுகமானது தமிழில் தான். விஜய் ஜோடியாக ‘தமிழன்’ முதன்முதலில் நடித்த பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ‘தமிழன்’ படத்தை இயக்கியவர் மஜித். அந்தப் படத்தின் மூலம்தான் டி.இமானும் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தீபிகா படுகோனே: ‘பத்மாவதி’ படத்தின் சர்ச்சையால் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைக்கப்பட்டிருக்கும் தீபிகா படுகோனே, முதன்முதலில் நடித்தது கன்னடப் படத்தில். 2006ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் பெயர் ‘ஐஸ்வர்யா’. அந்தப் படத்தில் உபேந்திரா ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பிறகு பாலிவுட்டில் நடித்து, ஹாலிவுட்டில் நடிக்கும் அளவுக்குப் புகழ் பெற்றுள்ளார்.
கத்ரினா கைஃப்: கத்ரினா கைஃப் நடிப்பில் முதலில் வெளியான படம் ‘பூம்’ என்ற ஹிந்திப் படம்தாம். ஆனால், அவர் முதன்முதலில் நடிக்கத் தொடங்கியது ‘மல்லிஸ்வரி’ என்ற தெலுங்குப் படத்தில். வெங்கடேஷ் ஹீரோவாக நடித்த அந்தப் படம், 2004ஆம் ஆண்டு ரிலீஸானது.
கிர்த்தி சனோன்: ‘ஹீரோபண்ட்டி’ படத்தில் நடித்த கிர்த்தி, ‘தில்வாலே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார். ஆனால், அவர் முதன்முதலில் அறிமுகமானது ‘நெனோகடிந்தே’ என்ற தெலுங்குப் படத்தில். இந்தப் படத்தில் மகேஷ் பாபுதான் ஹீரோ.