Advertisment
Presenting Partner
Desktop GIF

‘திருட்டுப்பயலே 2’ - விமர்சனம்

ஒவ்வொரு தனி மனிதனும் திருடனாக இருந்துகொண்டு, சமூகம் சரியில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் கருத்தை முன்வைக்கிறது இந்தப் படம்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘திருட்டுப்பயலே 2’ - விமர்சனம்

இந்த உலகத்தில் எல்லாருமே திருடர்கள் என்பதுதான் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ஒன்லைன்.

Advertisment

முக்கியமான ஆட்களின் போன்களை ஒட்டுக் கேட்கும் போலீஸ் வேலை பார்க்கிறார் பாபி சிம்ஹா. அவர் மிகவும் நல்லவர், லஞ்சம் வாங்க மாட்டார் என்பதாலேயே அந்த வேலையை அவருக்கு கொடுக்கிறார் உயரதிகாரியான முத்துராமன். ஆனால், ஒட்டுக்கேட்பதை வைத்து யாருக்கும் தெரியாமல் சிலபல கோடிகளை சுருட்டுகிறார் பாபி சிம்ஹா.

அவருடைய மனைவியான அமலா பால், ஃபேஸ்புக் பைத்தியம். தன்னுடைய போட்டோவுக்கு கிடைக்கும் லைக்ஸைப் பார்த்து சந்தோஷப்படுபவர். ஃபேஸ்புக்கில் பெண்களைக் கவுக்கும் பிரசன்னாவிடம் அமலா பாலும் சிக்குகிறார். ஆனால், ஒருகட்டத்தில் அவன் நல்லவன் இல்லை என்று தெரிந்து விலக நினைக்கிறார். ஆனால், அமலா பாலின் நிறைய போட்டோக்கள் பிரசன்னாவிடம் இருந்ததால், அவரால் விலக முடியவில்லை.

ஒருநாள் வேறொரு விஐபி சம்பந்தப்பட்ட விஷயமாக ஒட்டு கேட்கும்போது, அமலா பாலிடம் பிரசன்னா பேசுவதை ஒட்டுக் கேட்கிறார் பாபி சிம்ஹா. அதன்பிறகு என்ன நடந்தது? என்பது மீதிக்கதை.

மனைவியின் கள்ளக்காதல் பற்றி ‘திருட்டுப்பயலே’ எடுத்த சுசி கணேசன், இதில் இந்த காலகட்டத்துக்கு ஏற்ப சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்படும் தீமைகள் பற்றியும், கணவன் - மனைவி உறவு பற்றியும் அழகாகக் கூறியுள்ளார். எவ்வளவுதான் காதல் இருந்தாலும், ஒவ்வொரு கணவன் - மனைவியும் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியத்தை இந்தப் படம் வலியுறுத்துகிறது. மேலும், சமூக வலைதளங்களை எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்பதையும் இந்தப் படம் விளக்குகிறது.

பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் மூன்று பேருக்குமே சரிசமமான, அழுத்தமான கேரக்டர்கள். ஹானஸ்ட் கரெப்ட்டாக, நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிக்கும் வகையில் வலிமையான கேரக்டரில் நடித்துள்ளார் பாபி சிம்ஹா. ஜிம் பாடியும், யங் லுக்குமாக பிளேபாய் கேரக்டரில் பிரசன்னா பக்காவாகப் பொருந்திப் போகிறார். இதேபோல் நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்தால், பிரசன்னா உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

அவ்வப்போது உரித்த கோழியாகக் காட்டினாலும், தடம் மாறாத பெண்ணாக அமலா பால் அவ்வளவு அழகு. ஆரம்ப காட்சிகளில் அவரின் மேக்கப்பில் கொஞ்சம் அக்கறை காட்டியிருக்கலாம். போகப்போக அழகாகத் தெரிகிறார். டிஐஜியாக நடித்திருக்கும் முத்துராமன் நடிப்பு அருமை. ‘வழக்கு எண் 18’க்குப் பிறகு அழுத்தமான கேரக்டர்.

வித்யாசாகரின் இசையில் ‘நீ பார்க்கும் பார்வை கண்ணோடு’ பாடல், ரசிக்க வைக்கும் மெலடி. செல்லதுரையின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் திருடனாக இருந்துகொண்டு, சமூகம் சரியில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் கருத்தை முன்வைக்கிறது இந்தப் படம்.

Tamil Cinema Amala Paul Prasanna
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment