”குறும்படம் பிடித்திருந்தால் பணம் அனுப்புங்கள்”: குறும்படம் மூலம் சம்பாதித்த இயக்குநர்

”படம் பிடித்திருந்தால் எங்கள் அக்கவுண்டில் பணம் செலுத்துங்கள். அவ்வாறு செலுத்தினால் நாங்கள் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்ற எண்ணத்தை எங்களுக்கு தரும்.”

ஏராளமான குறும்படங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றது. நமக்கு பிடித்த இயக்குநர், நம் நண்பர்கள் எடுத்த குறும்படங்கள் என எல்லாவற்றையும் யூ-டியூபில் நாம் இலவசமாக பார்த்து விடுகிறோம். குறும்படங்கள் பெரும்பாலும் நண்பர்கள் இணைந்து அவர்களுடைய பொருட்செலவில் தான் முழுவதுமாக தயாரிக்கப்படுகின்றன. அதற்காக, அதிகபட்சம் நல்ல தரமான குறும்படங்களை எடுப்பவர்களுக்கு ஏதேனும் தொலைக்காட்சி, அமைப்புகள் ஆகியவை விருதுகள் வழங்கலாம். இதனால், ஊக்கமும், தனது படைப்பு மற்றவர்களால் பாராட்டப்பட்டால் மனநிறைவும், அந்த குறும்படங்களை எடுத்தவர்களுக்கு கிடைக்கும். ஆனால் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிபுரிய பணம் கிடைக்காது.

ஆனால், வங்காள இயக்குநர் ஒருவர் தன் குறும்படம் பிடித்திருந்தால் தனக்கு பணம் அனுப்புமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்து, இந்த புதிய முயற்சியில் வெற்றியும் அடைந்திருக்கிறார்.

இந்திராணில் ராய் சௌத்ரி எனும் வங்காள இயக்குநர் சமீபத்தில் பலோபஷார் ஷோஹோர் (சிட்டி ஆஃப் லவ்) என்ற குறும்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தை இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் இலவசமாக யூடியூபிலும், மற்ற நாடுகளில் விமியோ எனும் இணையதளத்திலும் காணலாம்.

குறும்படம் ஆரம்பிக்கும் முன்பு இயக்குநர் திரையில் தோன்றி, “இந்த குறும்படம் பிடித்திருந்தால் உங்களால் இயன்ற சிறு தொகையை எங்களது பே-டி.எம். அக்கவுண்டில் செலுத்துங்கள். நீங்கள் அவ்வாறு செலுத்தினால் நாங்கள் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்ற எண்ணத்தை எங்களுக்கு தரும்.”, என்று சொல்கிறார். அதேபோல், படம் முடிந்த பின் திரையில் பே-டி.எம். அக்கவுண்ட் காண்பிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில், இந்த முயற்சி தோல்வியிலேயே முடியும் என அவரை சுற்றியிருந்தவர்கள் கூறிவந்தனர். மக்கள் குறும்படத்தை பார்த்துவிட்டு தங்கள் வேலைகளை செய்ய கிளம்பிவிடுவர் என்பதுதான் அனைவரது எண்ணமாக அப்போது இருந்திருக்கும்.

ஆனால், அதுதான் நடக்கவில்லை. இந்த கட்டுரை வெளியாகும் வரை 92,005 பேர் அந்த குறும்படத்தை பார்த்துள்ளனர். அதில் ஏராளமானோர் பணம் செலுத்தியதில் தங்கள் அக்கவுண்டில் இச்சமயம் வரை சுமார் ரூ.60,000 வந்து சேர்ந்துள்ளதாகவும், குறைந்தபட்சமாக 1 ரூபாயும், அதிகபட்சமாக 5,000 ரூபாயும் தனிநபர்கள் செலுத்தியுள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார். படத்திற்கு செலவிட்ட பாதி தொகை இதனால் கிடைத்துவிட்டது என்கிறார் ராய் சௌத்ரி.

பல்வேறு பொருளாதார பிரச்சனைகளால் கடந்தாண்டு வரை மனக்கஷ்டத்தில் இருந்த இயக்குநர் ராய் சௌத்ரி, தற்போது தான் மேற்கொண்ட இந்த புதிய முயற்சியில் வெற்றி கண்டதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

குறும்படங்களால் லாபம் ஏதும் எதிர்பார்க்க முடியாத நிலையில், ராய் சௌத்ரி மேற்கொண்ட இந்த முயற்சி குறும்படத்திற்கென நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த வழிமுறையை சுதந்திரமாக படம் எடுக்க விரும்புபவர்கள் கையாண்டால் அவர்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும் என நம்பலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close