Vikram-Hansika Starrer Thuppakki Munai Review in Tamil: பல மெசேஜ்களை ஒரே படத்தில் சொல்ல நினைத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறது கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் விக்ரம் பிரபுவின் 'துப்பாக்கி முனை'.
கதைப்படி, மும்பையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் விக்ரம் பிரபு, தந்தை வளர்ப்பில் கண்டிப்புடன் வளராத ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். அவரின் துப்பாக்கியில் உள்ள ஒவ்வொரு தோட்டாக்களிலும், ஒவ்வொரு ரவுடிகளின் பெயர் உள்ளது என்று வாழ்பவர். டப்பு டப்பு என போட்டுத் தள்ளி போய்க் கொண்டே இருப்பவர். இவரது அதிரடி என்கவுண்ட்டர்களால் பல முறை சஸ்பென்ட் செய்யப்படுகிறார். அப்போது கூட, அதிகாரிகள் Unofficial-ஆக இவரிடம் உதவிகள் கேட்கும் அளவிற்கு கெட்டிக்காரர்.
ஆனால், இந்த முரட்டு குணத்தால் தாய், காதலி என அனைவரும் இவரை விட்டு பிரிந்து செல்கிறார்கள். தனிமையில் வாடும் விக்ரம் பிரபுவிற்கு, இராமேஸ்வரத்தில் பிடிப்பட்ட ஒரு மாவோயிஸ்ட்டை 'முடிக்கும்' அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது. அதனை விக்ரம் பிரபு வெற்றிகரமாக முடித்தாரா, இல்லையா? என்பதே மீதிக்கதை.
முகத்தில் தாடியையும், கோபத்தையும் ஒருசேர கனெக்ட் செய்ய முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் விக்ரம் பிரபு. தன் வேலை மீதான காதலை தாயிடம் புரிய வைக்க முயன்றும், அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்கும் போது நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
படம் முழுக்க உர்ரென்று இருக்கும் பாத்திரம் என்பதால், மேற்கொண்டு விக்ரம் பிரபுவுக்கு நடிப்புக்கென்று ஸ்கோப் இல்லை. ஆனால், தனது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
ஹன்சிகா, சில சீன்களே வந்தாலும், படத்தை நகர்த்திச் செல்ல பயன்பட்டுள்ளார். இவர் எதற்கு இந்தப் படத்தில்? என்று வழக்கமாக நாம் கேட்கும் கேள்வியை இங்கு கேட்க முடியாது.
இயக்குனர் தினேஷ் செல்வராஜ்... படம் தொடங்கியவுடன் கதைக்குள் சென்றது முதல் பிளஸ். டக்கு டக்கு வென்று காதல் எபிசோடை முடித்து, ஆடியன்ஸை நெளிய வைக்காமல் இருந்தது இரண்டாவது பிளஸ். டூயட் பாடல்கள் இல்லாதது மூன்றாவது பிளஸ். இதற்கு இவருக்கு நாம் ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்.
இண்டர்வெலுக்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் தான் படம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. வேல ராமமூர்த்தியின் என்ட்ரிக்கு பிறகு, படம் மேலும் சீரியஸ் லெவலுக்கு செல்கிறது.
இரண்டாம் பாதியில் ஆக்ஷன் + செண்டிமெண்ட் + மெசேஜ் என்று கலந்து கொடுத்து படத்தை முடித்துள்ளார் இயக்குனர் தினேஷ்.
எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தியின் நடிப்பு எப்போதும் போல வாவ்... கற்பழிப்பின் கோரத்தை காட்டி நம்மை கலங்க வைக்கும் இயக்குனர், மீடியாக்களின் பசியையும் தைரியமாக, கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து சமீபத்தில் வெளியான 'ராட்சசன்' படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் துப்பாக்கி முனையும் வெற்றிப் பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்.
ராமேஸ்வரத்தை, இதற்கு முன் இவ்வளவு அழகாக எந்தப் படத்திலும் நாம் பார்த்திருக்க முடியாது. ஒளிப்பதிவாளர் ரசமதியின் ஒர்க் அபாரம். இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஹீரோ என்றே சொல்லலாம். BGM தான் படத்தின் உயிர் நாடி.
ஒட்டுமொத்தத்தில், ஒரு நல்ல மெசேஜ் உள்ள குடும்பத்துடன் கண்டு ரசிக்கத் தக்க படம் துப்பாக்கி முனை.