/indian-express-tamil/media/media_files/2025/10/27/tms-2025-10-27-10-32-30.jpg)
தமிழ் சினிமா வரலாற்றில் தனது வசீகர குரலால் ரசிகர்களை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிப்போட்டிருந்த ஒரு பாடகர் என்ற பெருமை பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனை தான் சேரும். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். டிஎம்எஸ் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் செளந்தரராஜன் அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த காரைக்குடி ராஜாமணி ஐங்காரிடம் இசை பயிற்சி பெற்றவர்.
இவர் முதலில் மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார். கச்சேரிகளில் தனது தனித்துவமான குரல் வளத்தால் மக்களைக் கவர்ந்து வந்த டி.எம்.சௌந்தரராஜனுக்கு, 1950-ஆம் ஆண்டு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ’கிருஷ்ணவிஜயம்’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்த ‘ராதே என்னை விட்டுப் போகாதடி’ என்ற பாடலின் மூலம் டி.எம்.எஸ் முதன் முதலில் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ’மந்திர குமாரி’, ’தேவகி’, ’சர்வாதிகாரி’ போன்ற பல படங்களில் தொடர்ச்சியாக அவருக்கு பாடல் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.
டி.எம்.எஸ் பாடல்கள் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார். 1960-ல் வெளியான ’பட்டினத்தார்’, ’அருணகிரி நாதர்’ போன்ற படங்களில் அவர் நடித்திருந்தார். இதில் ’அருணகிரி நாதர்’ திரைப்படத்தில் இவர் பாடிய, ”முத்தைத்தரு பக்தித் திருநகை” பாடல் இன்றைய தலைமுறையினர் வரை சிறந்த பாடலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றும் எல்லா இடங்களிலும் இந்த பாடல் ஒலிக்கிறது. இப்படி தன் குரல் வளத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டு பிரபலமடைந்த பாடகர் டி.எம்.எஸ், பிரபல பாடகர் ஒருவரை புகழ்ந்துள்ளார்.
இதுதொடர்பாக வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு டி.எம்.எஸ்-ஸின் நெருங்கிய நண்பர், பத்திரிகையாளர் ரவி பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, "எஸ்.பி.பால சுப்ரமணியமை டி.எம்.எஸ்-ஸிற்கு பிடிக்காது என்று கிடையாது. அவரை பிடிக்கும். மலேசியா வாசுதேவன் குறித்து டி.எம்.எஸ் அடிக்கடி சொல்லியிருக்கிறார். ’ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு’ பாட்டை மலேசியா வாசுதேவன் மிக அருமையாக பாடியிருக்கிறார் என்று சொல்வார்.
மலேசியா வாசுதேவன் குரலில் மிடுக்கும், கம்பீரமும், தமிழ் உச்சரிப்பும் சரியாக இருக்கிறது என்று சொல்வார். சீரியல் கோவிந்தராஜன் பாடல்களும் டி.எம்.எஸ்-ஸிற்கு பிடிக்கும் அவரை போன்று என்னால் பாட முடியாது என்று கூறுவார்” என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us