தான் எம்.பி.ஏ. படித்திருப்பதாகவும், வீட்டில் சண்டை போட்டு ஓடிவந்துவிட்டதாகவும் கூறி பால சரவணன் குப்பத்தில் தங்குகிறார் தினேஷ். ஒருநாள் பால சரவணனை வில்லனின் ஆள் ஒருவன் அடித்துவிட, அவனைப் புரட்டியெடுக்கிறார் தினேஷ். கோபமான வில்லன் திலீப் சுப்பராயன் தினேஷை அடிக்கவர, அவரையும் அடித்துத் துவைக்கிறார் தினேஷ்.
இதனால், திலீப் சுப்பராயனின் அப்பாவான சரத் லோகிதாஸ்வா கோபமாகி தினேஷை கொல்லச்சொல்ல, திடீரென படகுப்போட்டியில் விட்டுக்கொடுத்து வில்லன்களுடன் நண்பராகிறார் தினேஷ். அவர் ஏன் அப்படிச் செய்தார்? உண்மையிலேயே தினேஷ் யார்? என்பது விறுவிறு திரைக்கதை.
2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்கப்பட்ட படம் இது. நவம்பர் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதமே ஷூட்டிங் முடிந்து மொத்தப் படமும் தயாராகிவிட்டது. ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால், நாளை ரிலீஸாக இருக்கிறது. காலம் கடந்து வந்தாலும், கனமான கதையுடன் ரிலீஸாகியிருக்கிறது இந்தப் படம்.
படம் தொடங்கிய 15 முதல் 20 நிமிடங்களுக்கு, ‘என்னடா ஜவ்வா இழுக்குறாங்களே...’ என்று அயர்ச்சி ஏற்படுகிறது. ஆனால், வில்லனின் ஆளை தினேஷ் அடிப்பதில் தொடங்கும் விறுவிறுப்பு, படம் இறுதிவரை தொடர்கிறது. இடைவேளையின்போது அடுத்து இப்படித்தான் நடக்கும் என நாம் நினைக்க, வேறுவிதமான திரைக்கதை மூலம் ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குநர்.
‘விசாரணை’ படத்திற்குப் பிறகு நடித்ததால், தினேஷின் நடிப்பில் அந்தப் பாதிப்பு கொஞ்சம் தெரிகிறது. ஆனால், வலிமையான கேரக்டரை அசத்தலாகச் செய்திருக்கிறார். அழகாக வந்துபோகிறார் நந்திதா ஸ்வேதா. பால சரவணனுக்கு, படம் முழுக்க வருகிற கேரக்டர். ‘சுறா சங்கர்னா சும்மாவா’ என்று சிரிக்க வைக்கிறார்.
அதிரடி வில்லன்களாக திலீப் சுப்பராயன், சரத் லோகிதாஸ்வா இருவருமே அற்புதமாக மிரட்டியிருக்கிறார்கள். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையும் விறுவிறுப்புக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும், வித்தியாசமான ட்விட்ஸ்ட்களால் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.