இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களைப் பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில், எக்கோ என்ற இசை நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணையின் போது, இளையராஜா தான் அனைவருக்கும் மேலானவன் என கருத்து தெரிவித்திருந்தாகவும், பாடல்களில் தனது உரிமைதான் மேலானது என பின்னர் கூறியதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து நீதிமன்றம், ”வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” எனக் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில் கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து, இளையராஜாவை மறைமுகமாக விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட இசை வெளியிட்டு விழா ஒன்றில் பேசிய வைரமுத்து, “இசையும் பாடல் வரிகளும் இணைந்தால் நல்ல பாடல் உருவாகும். சில சமயங்களில் இசையை விட மொழி சிறந்ததாகத் திகழும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்துகொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என பேசியிருந்தார்.
இந்தநிலையில், வைரமுத்து இளையராஜாவை அவமதித்துள்ளதாக கூறி, இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கடுமையாக சாடியுள்ளார். ‘வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறி விட்டது’ எனவும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள கங்கை அமரன், “மனுஷனுக்கு எப்போதுமே நன்றி வேணும். வைரமுத்து அவர்களை வாழவைத்த இளையராஜாவை, ஃபோட்டோ வைத்து அவர் கும்பிட வேண்டும். இனிமேல் வைரமுத்து அவர்களே.... இளையராஜா குறித்து நீங்கள் குற்றங்களோ குறைகளோ சொல்லுவதாக இருந்தால், அதன் விளைவுகளை நீங்கள் வேறமாதிரி சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“