‘கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
கோடீஸ்வரி சேலை: ஈவ்னிங் லுக்கிற்கு கச்சிதமான கிளாஸிக் பிளாக் சில்க் சாரி!
அது சரி… சும்மா ஓரிடத்தில் மெய்மறந்து உட்கார்ந்து கனவுகளில் லயித்துப் போக சிலரால் தான் முடியும். அப்படியெனில் மற்றவர்கள் என்ன செய்வது? அதற்கும் ஒரு அட்டகாசமான ஐடியா தருகிறோம். அதாவது தமிழின் சிறந்த காதல் & ரொமாண்டிக் படங்களை இங்கே பட்டியலிடுகிறோம். காதலிப்பவர்கள், காதலை எதிர்நோக்குபவர்கள், காதலருடன் சண்டையிட்டு பிரிந்து இருப்பவர்கள் என அனைவரும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, இதில் ஏதாவது ஒரு படத்தை, மனதில் வேறு எதையும் நினைக்காமல் பாருங்கள். பிறகென்ன, காதல் ஊற்று பல மடங்காக பெருக்கெடுத்து, அதிகளவில் ‘ஆக்ஸிடோஸின்’ சுரக்கும்.
காதலை மையப்படுத்தி பல நூற்றுக் கணக்கான படங்கள் தமிழ் சினிமாவில் இருந்தாலும், ஒரு சில படங்கள் மட்டுமே என்றுமே பசுமையான நினைவுகளையும், அழுத்தமான உணர்வுகளையும் தரும். முக்கியமாக காதல் என்றாலே, எப்படியும் கடைசியில் இருவரும் சேர்ந்து விட வேண்டும் என்ற பாஸிட்டிவ் எண்ணத்தினால் இங்கு ‘96’, ‘காதல்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ உள்ளிட்ட சில படங்களை தவிர்க்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதை புரிந்துக் கொள்வீர்களாக.
காதலுக்கு மரியாதை
காதல் சுயநலமற்றது. அதனால் தான் தன்னைச் சேர்ந்தவர்களையும் பற்றி யோசிக்கிறது என்பதை மிகுந்த அழுத்தத்துடன் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்த படம். பெற்றோர்களுக்காக காதலை துறக்க முடிவு செய்த காதலர்கள், பிள்ளைகளை சேர்த்து வைக்க முடிவு செய்த பெற்றோர்கள் என படம் முழுக்க உணர்வு ததும்பல்கள் ஏராளம். குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியும், அதற்கு இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும், காதலை வெறுப்பவனையும் காதலிக்க வைக்கும்.
சில்லுனு ஒரு காதல்
தீவிர காதலில் இருந்து அந்தக் காதல் தோற்றுப் போனால் வாழ்க்கையே அவ்வளவு தான் என புலம்புபவர்களுக்கு, குந்தவி போன்ற பெண் மனைவியாகக் கிடைத்தால், நிச்சயம் புதிய காதல் பிறக்கும். காதலர்களை விட, திருமணத்துக்குப் பிறகு காதலிப்பவர்களுக்கு இந்தப் படம் ஸ்பெஷல் டெடிகேஷன். மனைவியை பிரிந்து வாடும் வலிகளை ‘நியூயார்க் நகரம்’ பாடல் அத்தனை உயிரோட்டமாக சொல்கிறதே, அது போதாதா?
மெளன ராகம்
சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘ராஜா ராணி’ படத்தை ‘மெளன ராகத்தின்’ அடுத்த வெர்ஷன் என பெரும்பாலானோர் சொல்வதுண்டு. ஆனால் மெளன ராகத்திற்கும் முந்தைய வெர்ஷன் ஒன்று உண்டு. அது இயக்குநர் மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’. இந்த மூன்று படங்களிலும் கதைகளம் ஒன்று தான். கைகூடாத காதல், அதற்குப் பின் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணம். காதலனை மறக்கவும் முடியாமல், கணவருடன் வாழவும் முடியாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட தவிப்பு. பின்னர் கணவனின் பொறுமையும் தன்னிகரற்ற காதலையும் புரிந்துக் கொண்டவள், அவனை ஆத்மார்த்தமாக கரம் பிடிப்பாள். காதல் தோல்விக்குப் பிறகு வேறு வாழ்க்கையே இல்லை என நினைப்பவர்கள், குறிப்பாக பெண்கள் நிச்சயம் இந்தப் படங்களைப் பார்க்கலாம்.
அலைபாயுதே
நிஜ வாழ்க்கையில் வீட்டுக்கு தெரியாமல் பலர் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டு அவரவர் வீட்டில் இருந்ததற்கான விதை ‘அலைபாயுதே’ படம் போட்டது தான். பெற்றோருக்கு தெரியாமல் பதிவுத் திருமணம். உண்மை உடையும் போது இருவரும் தத்தம் வீட்டை விட்டு வெளியேறி தங்கள் வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு எலியும், பூனையுமாக சண்டை போட்டுக் கொண்ட தம்பதிகளுக்குள், ஆழமான அன்பு இருப்பதை உணர்வுப்பூர்வமான பின்னணி இசையுடன் திரையில் காட்டிய படம்.
காதல் கோட்டை
90-களின் பிற்பகுதியில் வந்த இப்படம் பார்க்காத காதலுக்கு மிகவும் பாப்புலரானது. இப்போது ஒருவரையொருவர் சந்திக்காமல், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் காதலிக்கிறார்கள். ஆனால் இதை பல ஆண்டுகளுக்கு முன்பே கடிதம் மூலம் கூட சொல்லிக் கொள்ளாத காதலாக காட்டியிருந்தது காதல் கோட்டை. காதலுக்கு முகம், அழகு, அந்தஸ்து, என எதுவும் தேவையில்லை. அதற்கு தேவையானதெல்லம் நிபந்தனையற்ற அன்பும், அளவுக்கடந்த புரிதலும் தான் என்பதை வெகு இயல்பாக திரையில் காட்டியது இப்படம்.
ரோஜா
பெண்ணுக்கு விருப்பமில்லாத திருமணம் அது. பின்னர் ஒருவழியாக ஒருவருக்கொருவர் அன்பைக் கண்டறியும் சமயத்தில், கணவனை தீவிரவாதிக் கூட்டம் சிறைபிடித்து விடுகிறது. அவனுக்கு என்னாகியிருக்கும், திரும்பி வருவானா? மாட்டானா என்ற கேள்வியுடன் ஹீரோயின் மது பாலாவின் தவிப்பு பார்க்கும் நம்மையும் தொற்றிக் கொள்ளும். அரசாங்கத்தை நாடி தனது கணவரை மீட்க அவள் போராடுவது, பார்ப்போரை கலங்க வைக்கும்.
மின்னலே
காதலிப்பவன் ஒருபுறம், பார்க்காத இன்னொருவனுடன் நிச்சயதார்த்தம். இவர்களில் யாரை வாழ்க்கைத் துணையாக ஏற்பது என்ற குழப்பத்தில் தத்தளிக்கும் பெண்ணைப் பற்றியது. ’லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ என்பார்களே அப்படி ஒன்று நடந்து விட்டால், அதற்குப் பிறகான பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு இப்படம் ஓர் உதாரணம்.
பம்பாய்
வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த காதலர்கள் சந்திக்கும் சோதனைகளும், இன்னல்களும், கூடவே கொஞ்சம் அரசியலும். அந்த அரசியல் விளைவுகளால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் ஆபத்துகள், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே கதை. பையன் இந்து, பெண் முஸ்லிம் அதனால் ஏற்படும் மதக் கலவரங்கள் எப்படி அவர்களை பாதிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருப்பார் மணிரத்னம்.
நீதானே என் பொன்வசந்தம்
பள்ளிப் பருவ காதல், ஈகோவால் பிரிவு. பின் கல்லூரியில் ரீ யூனியன் அதன் பின் மீண்டும் ஈகோவால் பிரிவு. இருவரும் ஆளுக்கொரு திசையில். பேச சந்தர்ப்பங்கள் இருந்தும், அப்போதும் அந்த ஈகோ பேச விடாமல் தடுக்கிறது. விடிந்தால் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் கல்யாணம். அப்போதும் எதுவும் சொல்ல முடியாமல், அவனை வாழ்த்தவும் முடியாமல் தவிக்கிறாள் அந்தக் காதலி. புரிதல் இல்லாத காதலர்கள் இந்தப் படத்தின் மூலம் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளலாம்.
ஓகே கண்மணி
இது இந்தக் காலத்து டிரெண்டுக்கு ஏற்ற படம். கல்யாணம் வேண்டாம், ஆனால் ஒரு கம்பெனி வேண்டும் என நினைக்கும் இருவர். தப்பித் தவறி கூட காதல், கல்யாணம் எல்லாம் நம் வாழ்க்கையில் வந்திடக் கூடாது என மிகுந்த கவனமாக இருக்கிறார்கள். ’காதல் காற்று போல, அதை யாராலும் தடுக்க முடியாது’ என்பதை இருவரும் பின்னால் உணர்கிறார்கள்.
மேற்கூறியது போல, நிறைய காதல் படங்கள் தமிழில் இருந்தாலும், எப்போது பார்த்தாலும், நமக்கும் ‘ஆக்ஸிடோஸினை’ சுரக்கும் படங்களைத் தான் இங்கே குறிப்பிட்டுள்ளோம். வேறென்ன, இந்த காதலர் தினத்தில் இந்தப் படங்களைப் பார்த்து, உங்களை இன்னும் கொஞ்சம் ரீ சார்ஜ் செய்துக் கொள்ளுங்கள்! இன்னும் இன்னும் காதலிப்போம், ’அன்பினாலானது இவ்வுலகம்’ என்பதை நிரூபிப்போம்!