ஜனார்தன் கௌஷிக்
பொதுவாக மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் திரைப்படம் என்று எல்லா திரைப்படத்திற்கும் விளம்பரம் செய்வார்கள் ஆனால் இந்த திரைப்படத்திற்கு நிஜமாவே மக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
வலிமை அப்டேட்... வலிமை அப்டேட்... என்று இத்திரைப்படத்தினை பற்றி கேட்காத அல்லது கேள்வி படாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கிரிக்கெட் வீரர் மொயின் அலியை கேட்டு பாருங்களேன்!
திரைப்படத்தின் விமர்சனத்திற்கு செல்வதற்கு முன்பு, 'படம் தயாராகி ரிலீஸ் செய்வதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள், நெருக்கடிகள் இருந்த போதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று தணிந்து மக்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பும்போது’ மட்டும் தான் படத்தை திரைக்கு கொண்டு வரவேண்டும் என்று ஆணித்தனமாக இருந்து, மக்கள் நலம் மேல் அன்பு கொண்ட நடிகர் அஜித்குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
சரி படம் எப்படி இருக்கு....?
அஜித்குமார் என்ற ஒற்றை பிம்பத்தை சுற்றியே நகரும் மற்றோரு மாஸ் மசாலா திரைப்படம் தான் வலிமை. அம்மா, தம்பி, அண்ணா செண்டிமெண்ட் என்று அஜித் திரைப்படங்களுக்கே உரிய அனைத்து விஷயங்களும் இதில் உள்ளது. வேலை இல்லாமல் சுற்றி திரியும் இளைஞர்களை எப்படி ஒரு சமூக விரோத கும்பல் தன் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறது. அதை காவல் துறை அதிகாரியாக வரும் அஜித் எப்படி தடுக்கிறார் என்பதை அதிரடி சண்டை காட்சிகளுடன் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் வினோத்.
அஜித்துடன் மற்றொரு புலனாய்வு அதிகாரியாக வரும் 'ஹூமா குரேசி’ தான் வரும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு மாஸ் ஹீரோ படத்தில் வரும் வில்லன்கள் அனைவருமே டம்மியாக தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத தமிழ் சினிமா விதி இந்த திரைப்படத்திலும் தொடர்கிறது. தமிழில் இத்திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கும் கார்த்திகேயா கும்மகொண்டா படம் முழுக்க போதை ஏற்றிக்கொண்டு பைக் சாகசம் செய்து கொண்டு நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
படத்தில் வரும் பைக் ஸ்டன்ட்ஸ் காட்சிகள் நிச்சயமாக பாராட்டக்குறியவை. ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்புராயன் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் கடும் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் பெருமளவு சண்டை காட்சிகள் அதை சுற்றியே நீண்ட நேரம் இருப்பதால் சற்று சலிப்பு தட்டுகிறது.
ஹீரோ, வில்லன் என்று இரண்டு பேருக்குமான பின்னணி இசையில் சிறப்பாக செயல் ஆற்றியிருக்கிறார்கள் யுவன் மற்றும் ஜிப்ரான். டூயட் பாடல் என்று கதைக்கு தேவை இல்லாததை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்காத இயக்குனருக்கு பாராட்டுக்கள். அதேசமயம், தீரன், சதுரங்க வேட்டை திரைப்படங்களை எடுத்த வினோத் படமா இது என்று நம்மை யோசிக்க வைக்கிறது. அஜித் பேசும் சோசியல் மெசேஜ் வசனங்கள் அவரது ரசிகர்களிடையே ஆரவாரம் பெரும். ஆனால் பொதுவான சினிமா ரசிகர்களுக்கு நாம் அஜித்தை தான் பார்க்கிறோமா? அல்லது அஜித் உருவில் சமுத்திரக்கனி வசனம் பேசுகிறாரா? என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு அத்தனை கருத்து வசனங்கள் படம் நெடுக வருகிறது. படத்தில் வரும் செண்டிமெண்ட் காட்சிகளும் நம்மை மிகவும் சோதிக்க வைக்கின்றன.
இதை மோசமான படம் என்றோ அல்லது இரண்டு வருடம் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றோ நாம் சொல்ல முடியாது. 'Action genre' திரைப்படங்களை கொண்டாடும் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் நிச்சயமாக விருந்தாக அமையும். ஆனால் வினோத் போன்ற ஒரு intelligent filmmaker இதை விட சிறப்பான படைப்பை வரும் காலங்களில் தரவேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் வேண்டுகோள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.