கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய வனிதா விஜயகுமார்! 11 மணி நேர போலீஸ் விசாரணையில் பரபரத்த பிக்பாஸ் வீடு!

“பிக்பாஸ் தமிழ் மூணாவது சீசன்-ல எல்லாமே நல்லாத் தானே போயிட்டு இருக்கு? வீட்ல இருக்கும் எல்லோருக்குள்ளும் தினம் தினம் ஏதாவது சண்டை வருது. மக்களும் அதை ஆர்வமா பாத்துட்டு தானே இருக்காங்க… அப்படியெனில், டிஆர்பி நல்லா தானே இருக்கணும்?  பிறகு எதற்கு இந்த கைது டிராமா-லாம்?” என்ற ரீதியில் பல ட்வீட்களை சமூக வலைத்தளங்களில் நம்மால் காண முடிகிறது.

இந்த கைது நடவடிக்கை டாக்-கிற்கு முக்கிய காரணம் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் வீட்டில் ‘எங்கப்பன் இப்படித் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தான்’ என்று போகிறபோக்கில் பகீர் பேச்சுக்களை அள்ளி வீசி சக போட்டியாளர்களை அலற வைத்துக் கொண்டிருக்கிறார் வனிதா. மதுமிதா, மீரா மிதுன் ஆகியோரிடம் இவரது அணுகுமுறை, பார்க்கும் நேயர்களையே எரிச்சலடைய வைக்கிறது. (அவர்கள் இருவரும் அதற்கு மேல் எரிச்சல் ஏற்படுத்துவது தனிக்கதை). இனிவரும் நாட்களில் கைக்கலப்பே ஆகலாம் எனும் ரேஞ்சுக்கு கலவரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மகளை கடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் வனிதாவை, பிக்பாஸ் அரங்கிற்குள்ளேயே நுழைந்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

வனிதா கடந்த 2000ல் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீகரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற ஒரு மகள் உள்ளனர். இதையடுத்து, ஆகாஷை விவாகரத்து செய்துவிட்டு, தொழிலதிபரான ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெயந்திகா என்ற ஒரு மகள் இருக்கிறார்.

இந்த நிலையில், வனிதா மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2012ம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு ஆனந்தராஜூடன் தான் ஜெயந்திகா வசித்து வருகிறார். இவர்கள் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். அப்படியிருக்கும் போது வனிதா ஜெயந்திகாவை சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார். அதன்பிறகு தான், பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கிறார். இதையடுத்து, தனது மகளை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா காவல் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்தார்.

ஆனந்தராஜ் கொடுத்த புகாரைத் தொடர்ந்து வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் போலீஸ் தேடிக் கொண்டிருக்க, தமிழ் பிக்பாஸ் ஷோவில் வனிதா இருப்பதை அறிந்த ஆனந்த்ராஜூ, போலீசுக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகிலுள்ள நசரத்பேட்டை பகுதியில் பிவிஆர் பிலிம்சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் 3 வீட்டுக்கு, நசரத்பேட்டை போலீஸ் உதவியுடன் தெலங்கானா போலீசார் விரைந்தனர். இதைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணி முதல் வனிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வனிதா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை போலீஸ் கைது செய்யவில்லை.

இந்நிலையில், வனிதாவின் மகள் ஜெயந்திகாவிடம் மகளிர் உரிமை ஆணைய துணைத் தலைவர் வசுந்தரா இன்று மாலை வாக்குமூலம் பெற்றார். அதில், தாய் வனிதாவுடன் செல்ல விரும்புவதாக ஜெயந்திகா வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கைது நடவடிக்கையில் இருந்து வனிதா தப்பியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close