ஆக்‌ஷன், மர்மங்கள் கலந்த திகிலுடன் களமிறங்கும் ‘சக்தி’: வேற லெவலில் வரலஷ்மி

வரலஷ்மி நடிக்கும் சக்தி திரைப்படத்தின் போஸ்டர் வியாழக்கிழமை வெளியானது. இத்திரைப்படத்தின் போஸ்டருக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

director mysskin, sakthi film, director priyadharshini, actress varalakshmi sarathkumar,

தமிழில் பெண்களை மையப்படுத்தி சமீப காலமாக திரைப்படங்கள் வரத்துவங்கியுள்ளன என கூறிக்கொண்டாலும், அவை உண்மையிலேயே ‘பெண்களை மையப்படுத்திதான்’ வருகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. 36 வயதினிலே, மகளிர் மட்டும், தரமணி உள்ளிட்ட அண்மை கால திரைப்படங்கள் பெண் மைய திரைப்படங்கள் என பொதுவாக கூறினாலும், அது ஒரு ஆண்களின் சிந்தனையே மேலோங்கியுள்ளது என்ற விமர்சனங்கள் எழுகின்றன. அந்த திரைப்படங்களில் கதாநாயகி தவிர திரைக்குப் பின்னால் இயக்குநர் தொடங்கி பல முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் ஆண்களாகத்தான் இருக்கின்றனர். இப்படி இருக்கும்போது, இயக்குநர் பிரியதர்ஷினியின் ‘சக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

வரலஷ்மி நடிக்கும் இத்திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த மர்மங்கள் நிறைந்த திகில் திரைப்படமாக இருக்கும் என்பது திரைப்படத்தின் போஸ்டரிலிருந்தே நமக்கு தெரிகிறது. குடும்ப பின்னணியிலிருந்தே கதாநாயகிகளை பார்த்துப்பழகிய நமக்கு சக்தி திரைப்படம்,
தமிழ் சினிமாவில் நிச்சயம் வேறுபட்ட ‘பெண் மைய’ சினிமாவுக்கான நல்லதொரு தொடக்கமாக இருக்கும் என இயக்குநர் பிரியதர்ஷினி உறுதிபட தெரிவிக்கிறார்.

இயக்குநர் பிரியதர்ஷினி

இந்த திரைப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் நம்பிக்கை, விடாமுயற்சியை அளிக்கும் திரைப்படமாக ‘சக்தி’ இருக்கும் என்ற நம்பிக்கை பிரியதர்ஷினியிடம் மேலோங்கியிருக்கிறது.

போடா போடி, தாரை தப்பட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களின் தன்னுடைய கதாபாத்திரங்களை அதற்கேயுரிய தன்மையுடன் மெருகேற்றி நடிப்பதில் தேர்ந்தவரான வரலஷ்மியை சக்தி திரைப்படத்திற்காக இயக்குநர் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. அதேபோல், கதையின் ஒன்லைனை கேட்டவுடனேயே ஓ.கே.சொல்லியிருக்கிறார் வரலஷ்மி.

’சக்தி’ திரைப்படத்தில் கதாநாயகர் இல்லை. ஆனால், படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்காக பிரபல நடிகருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில், அவரது பெயர் வெளியாகும்.

”தமிழ் சினிமா உட்பட ஒட்டுமொத்த இந்திய சினிமாவை எடுத்துக்கொண்டால் பெண்களை மையப்படுத்திய திரைப்படம் என்பதற்கு ஒரு வடிவம் இருக்கிறது. ஆனால், நான் அந்த வடிவத்தை தாண்டி ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். பெண்களை மையப்படுத்திய சினிமாவையும் வெற்றிப்படமாக கொடுக்க முடியும் என்பதற்கு ‘சக்தி’ உதாரணமாக அமையும்.”, என்கிறார் பிரியதர்ஷினி.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 19-ஆம் தேதி துவங்குகிறது. 2018-ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 அன்று திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இயக்குநர் மிஷ்கினிடம் துணை இயக்குநராக இருந்தவர்தான் இப்படத்தின் இயக்குநர் பிரியதர்ஷினி. அதனால், அவருடைய பிறந்தநாளான செப்டம்பர் 20-ஆம் தேதி ’சக்தி’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அன்று வெளியிட முடியவில்லை. இந்நிலையில், இத்திரைப்படத்தின் போஸ்டர் வியாழக்கிழமை வெளியானது. இத்திரைப்படத்தின் போஸ்டருக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Varalakshmi starring sakthi film poster released

Next Story
தொடரும் ‘மெர்சல்’ படத்தின் தடை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com