வேலு பிரபாகரன் இயக்கவுள்ள ‘கடவுள் 2’ படத்தின் கதை, தற்போது நடைபெற்றுவரும் ஆண்டாள் சர்ச்சையாக இருக்கக் கூடும் என்கிறார்கள்.
பிரபு, அமலா, ஜெய்சங்கர் நடித்த ‘நாளை மனிதன்’ படத்தின் மூலம் இயக்குநரானவர் வேலு பிரபாகரன். அதன்பிறகு சில படங்களை இயக்கியவர், 1997ஆம் ஆண்டு ‘கடவுள்’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்காக சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழ்நாடு அரசின் மாநில விருதைப் பெற்றார்.
‘கடவுள்’ படத்தில் மணிவண்ணன், ரோஜா, மன்சூர் அலிகான், அருண் பாண்டியன் ஆகியோரோடு வேலு பிரபாகரனும் நடித்திருந்தார். ஆனால், ‘வேலு பிரபாகரனின் காதல் கதை’, ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ என அவர் கடைசியாக இயக்கிய இரண்டு படங்கள் ‘ஏ’டாகூடமான வகையைச் சேர்ந்தவை.
இந்நிலையில், ‘கடவுள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் வேலு பிரபாகரன். ‘கடவுள் 2’ படத்தின் துவக்க விழா, நாளை மறுநாள் (ஜனவரி 18) நடைபெறுகிறது. இந்த விழாவில் பாரதிராஜா, சீமான் கலந்து கொள்கின்றனர். இந்தப் படத்தின் கதை, தற்போது நடைபெற்றுவரும் ஆண்டாள் சர்ச்சை குறித்தது என்று சொல்லப்படுகிறது.
‘கடவுள் 2’ படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.