‘நீ குறிப்பிட்டது என் தலைவரைப் பத்தியா இருந்தா, மவனே நீ பிரியாணிடி’ என்று ட்விட்டரில் வெங்கட் பிரபுவிடம் சண்டை போட்டுள்ளார் பாடகர் க்ரிஷ்.
வெங்கட்பிரபு தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘ஆர்.கே. நகர்’. அரசியல் காமெடிப் படமான இதை, சரவண ராஜன் இயக்குகிறார். வைபவ் ஹீரோவாக நடிக்க, சனா அல்தாப் ஹீரோயினாக நடிக்கிறார். இனிகோ பிரபாகர், சம்பத் ராஜ், சந்தான பாரதி, கருணாகரன், அரவிந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார்.
‘ஆர்.கே. நகர்’ படத்தின் டீஸர், நேற்று வெளியானது. அந்த டீஸரின் இறுதியில், ‘நடிகன்னா உனக்கு ஓட்டுப் போட்டுடுவாங்களா? எம்.ஜி.ஆரா நீ?’ என சம்பத் பேசுவது போல் வசனம் இடம்பெற்றுள்ளது.
கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்கியிருக்கும் இந்த நேரத்தில், இந்த வசனம் அவரைத்தான் குறிப்பிடுவதாகப் பலரும் நினைத்து வருகின்றனர். பின்னணிப் பாடகர் மற்றும் நடிகரான க்ரிஷ், ட்விட்டரில் தன்னுடைய கோபத்தைப் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளார்.
வெங்கட் பிரபுவின் ட்விட்டர் ஐடியைக் குறிப்பிட்டு, ‘கடைசி டயலாக்கில் யாரைச் சொல்ல ட்ரை பண்ற? என் தலைவனைப் பத்தி இருந்தா, நீ பிரியாணிடி’ என்று கோப சிம்பலுடன் வெளிப்படையாகவே பதிவிட்டுள்ளார்.
,
அதற்குப் பதிலளித்து வெங்கட் பிரபு, ‘டேய் நல்லவனே... எதா இருந்தாலும் நேர்ல பேசுவோம். படத்தைப் படமா பாரு’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், ‘முடியாது, நீ படமா எடு. சூழ்நிலையை ஏன் மேன் டயலாக்கா வைக்குற?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் க்ரிஷ்.
,
க்ரிஷின் தலைவன் யார்? கமல்ஹாசன் தான். கமலின் தீவிர ரசிகரான க்ரிஷ், அவருடைய பல ட்வீட்டுகளை ரீட்வீட் செய்துள்ளார். அத்துடன், கமலுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘ஹேப்பி ஹேப்பி பர்த்டே குருநாதா... தலைவா... உலக நாயகன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று பிறந்த நாள் கொண்டாடும் வெங்கட் பிரபுவுக்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் க்ரிஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.