நடிகர், தியேட்டர் கலைஞர், கதாசிரியர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்ட கிரிஷ் கர்நாட் உடல் நலக்குறைவால் இன்று காலை பெங்களூருவில் மறைந்தார்.
அவருக்கு வயது 81. கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் கிரிஷ் நடித்துள்ளார்.
1986-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘நான் அடிமை இல்லை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கிரிஷ். அதன் பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலன்’ படத்தில், காகர்லா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயின் நக்மாவின் அப்பாவாக நடித்து மிரட்டியிருப்பார். இந்தப் படம் தான் கிரிஷை தமிழ் ரசிகர்களிடம் நன்கு பரிச்சயமாக்கியது.
தொடர்ந்து ‘ரட்சகன், மின்சார கனவு, ஹேராம், செல்லமே, நர்த்தகி, முகமூடி, 24’ ஆகியப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
நாடகக் கலைஞர், எழுத்தாளர், இயக்குநர், திரைக்கதையாசிரியர், இலக்கியவாதி என பன்முகத் திறமை கொண்ட கிரீஷ் கொங்கனியை தாய்மொழியாகக் கொண்டவர். இருப்பினும் எழுதுவதற்கு ஏற்றதாக கன்னடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
1938-ல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிறந்த கிரிஷ், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். அங்கு அவர் முதல் முதலில் (1961) எழுதிய ‘யாயாதி’ என்ற நாடகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து பல நாடகங்களை கன்னடத்தில் எழுதியுள்ளார். கன்னட இலக்கியத்தில் இவர் எழுதியவற்றை ஆங்கிலம் மற்றும் சில இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/06/girish-karnad-1.jpg)
இலக்கியத்தில் இவரின் சேவையைப் போற்றும் விதமாக 1974-ல் பத்மஸ்ரீ, 1992-ல் பத்ம பூஷன், 1994-ல் சாகித்ய அகடமி உள்ளிட்ட விருதுகளை இந்திய அரசு இவருக்கு அளித்துள்ளது.
நாடகம், டாக்குமெண்ட்ரி, சினிமா என பலவற்றில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 10 தேசிய விருதுகள், 5 ஃப்லிம் ஃபேர் விருதுகள், 6 கர்நாடக மாநில விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார்.
எப்போதும் உரிமைக்கு குரல் கொடுக்க தயங்காத இவர், இந்துத்துவம், ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆகியவற்றை எதிர்த்து குரல் கொடுத்து வந்தார். 2015-ல் நடந்த ’திப்பு ஜெயந்தி’ விழாவில், பெங்களூரு விமான நிலையத்துக்கு திப்பு சுல்தானின் பெயரை வைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
அந்த விமான நிலையம், ’கெம்பே கெளடா’ என்ற விஜயரங்க மன்னரின் பெயரில் செயல்பட்டு வருகிறது. கிரிஷின் இந்த வலியுறுத்தலால், தங்களது சமூகத்தையும், மன்னரையும் அவர் அவமதிப்பதாக ஒரு சாரர் போர்க்கொடி தூக்கினர்.
பெங்களூருவில் கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட போது கைப்பற்றபட்ட டையரியில், கொலை செய்ய வேண்டும் என்ற பட்டியலில் கிரிஷின் பெயர் முதலில் இருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
லங்கேஷின் முதலாம் நினைவு தினத்தில் கலந்துக் கொண்ட கிரிஷ், ‘நானும் ஓர் நகர்புற நக்சல்’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகையை தன் கழுத்தில் அணிந்து வந்தார்.
இது அந்நேரத்தில் பேசுபொருளானது. உரிமைகளுக்கும், நியாயத்திற்கும் குரல் கொடுக்க வயது ஒரு தடையல்ல என்பதை இளைய சமூதாயத்திற்கு செய்கைகளால் எடுத்துரைத்த, கிரிஷ் கர்நாடின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.