பழம்பெரும் நடிகர் விணுசக்ரவர்த்தி காலமானார். அவருக்கு வயது 71. வியாழக்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழ் திரையுலகில் கடந்த 1980-ஆம் ஆண்டு நடிக்கத் தொடங்கினார். வில்லன், காமெடி என பல்வேறு கதாப்பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி தனது நடிப்பை வெளிப்படுத்தியவர் விணுசக்ரவர்த்தி. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள அவர், இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரைப்படவுலகில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடம் விணு சக்ரவர்த்தி நடித்து விட்டார் என்றே கூறலாம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், சத்தியராஜ், ராமராஜன், விஜய், மற்றும் அஜித் என பல்வேறு நடிகர்களுடன் அவர் தனது திரையுலக வாழ்க்கையை பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பிடும்படியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
"பரசங்கட கெண்டதிமாமா" என்ற கன்னட படத்தின் மூலமாக தான் இவர் திரையுலகில் முதன் முறையாக தோன்றினார். சிவகுமார், சரிதா நடித்த வண்டிச்சக்கரம் திரைப்படம் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களுக்கு இவர் திரைக்கதையும் எழுதியுள்ளார். சில்க் ஸ்மிதாவை திரையில் அறிமுகம் செய்ததும் இவர் தான். விணுசக்ரவர்த்தி தனது மனைவி, மகன் சரவணன், மகள் சண்முகப்பிரியா ஆகியோரோடு வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இவர் மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்.
விணுசக்ரவர்த்தி மறைவையொட்டி திரைபிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, விணுசக்ரவர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளனர்.