இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நேற்று (செப்.28) ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் தமிழ் வெப் சீரிஸ் பேட்டைக்காளியின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார். “ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ் வெப் சீரிஸ் பேட்டைக்காளியை அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறேன். எல்.ராஜ்குமார் இந்த சீரியஸை இயக்கியுள்ளார். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது” என்று ஜி.வி.பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.
பேட்டைக்காளி படத்தின் மோஷன் போஸ்டரில் ஜல்லிக்கட்டு நிகழ்வின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மக்கள் ஆரவாரத்துடன் போட்டியை காண்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தீபாவளிக்கு ஆஹா ஓடிடி தளத்தில் சீரிஸ் வெளியாகிறது.
பேட்டைக்காளி சீரிஸை தயாரித்து வழங்கும் இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில், “பேட்டைக்காளி சீரிஸை எல்.ராஜ்குமார் எழுதி, இயக்கி உள்ளார். 2 ஆண்டுகளாக இந்த படத்திற்கு நிறைய ஆய்வு செய்து எடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு, அதன் வரலாறு, மக்கள், அவர்களின் நடைமுறைகள், பரம்பரை மற்றும் பாரம்பரியம் என எல்லாவற்றையும் ஆராய்ந்து எடுத்துள்ளார். இது வெப் சீரிஸாக உருவாக்கப்பட்டுள்ளது. கலையரசன் சிறப்பாக நடித்துள்ளார். எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என்று கூறினார்.
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டாகும். பொங்கல் திருநாளன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இயக்குநர் வெற்றிமாறன் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்கி வருகிறார். வாடிவாசல் என்ற நாவலை தழுவி படம் உருவாகிறது. இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil