விஜய் 62 படத்தில் டெக்னீஷியன்களாக யார் யார் பணியாற்றப் போகிறார்கள் என்ற விவரம் கிடைத்துள்ளது.
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்த விஷயத்தையே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், படம் சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் லேட்டஸ்ட் தகவல்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்...
அடுத்த வருடம் பொங்கலுக்குப் பிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது என்கிறார்கள். ஷூட்டிங்கை விரைவில் முடித்து, தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமாம். சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் ‘விஸ்வாசம்’ படம் அடுத்த வருட தீபாவளிக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவான ‘கத்தி’ படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் தயாரிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக பின்னர் கூறப்பட்டது.
நயன்தாரா, ரகுல் ப்ரீத்சிங் - இந்த இரண்டு பேரும்தான் ஹீரோயின் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருக்கிறது. ‘வில்லு’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த நயன்தாரா, அதன்பிறகு ஜோடி சேரவே இல்லை. ஹீரோயினாகி 15 வருடங்களாகியும் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. சமீபத்தில் வெளியான ‘அறம்’ படம் நயனின் கிராஃபை அலேக்காகத் தூக்கி மேலே வைத்திருப்பதால், அவர் ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்கும் என பிரியப்படுகிறாராம் விஜய்.
ஆனால், ஏ.ஆர்.முருகதாஸுக்கோ ரகுல் ப்ரீத்சிங்கை நாயகியாக்க வேண்டும் என்று ஆசையாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கெனவே ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்துள்ளார் ரகுல் ப்ரீத்சிங். அந்தப் படம் தோல்வியைத் தழுவினாலும், அதற்குப் பின் வெளிவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வெற்றி பெற்றதால், ரகுலை ஹீரோயினாக்கலாம் என்று நினைக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.
‘அங்கமாலி டயரீஸ்’, ‘சோலோ’ போன்ற மலையாளப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த க்ரீஷ் கங்காதரன், விஜய் 62 படத்துக்கு ஒளிப்பதிவாளராக கமிட்டாகியுள்ளார் என்கிறார்கள். அதேபோல், தேசிய விருதுபெற்ற எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத், எடிட்டிங் பணிகளைக் கவனிக்க இருக்கிறார். அத்துடன், ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாரா அல்லது ‘கத்தி’ காம்பினேஷன் அனிருத் இசையமைப்பாரா என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.