நட்சத்திரக் கலைவிழா : விஜய், அஜித், நயன்தாரா, த்ரிஷா ஆப்சென்ட்

மலேசியாவில் நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாவில், விஜய், அஜித், நயன்தாரா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகர் - நடிகைகள் கலந்து கொள்ளவில்லை.

மலேசியாவில் நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாவில், விஜய், அஜித், நயன்தாரா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகர் – நடிகைகள் கலந்து கொள்ளவில்லை.

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, நாளை மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற இருக்கிறது. புக்கட் ஜலீல் இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்தக் கலைவிழாவில், கலைநிகழ்ச்சிகள் மட்டுமின்றி நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுகளும் நடைபெற உள்ளன.

இந்த விழாவில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர் – நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. நடிகர் சங்கத் தலைவரான நாசர், இவர்களை நேரில் சென்று சந்தித்து விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.

அழைப்பை ஏற்ற ரஜினிகாந்த், நேற்று இரவு மலேசியா புறப்பட்டுச் சென்றார். அவருடன் நடிகர்கள் விஷால், பரத், ஷாம், ஆர்யா, ஆர்.கே.சுரேஷ், கலையரசன், ரமணா, ஹரீஷ் கல்யாண், ஆதவ் கண்ணதாசன், கெளதம் கார்த்திக், நட்டி, ஷாந்தனு பாக்யராஜ், நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், ஜனனி ஐயர், பிந்து மாதவி, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் சென்றுள்ளனர். மேலும், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய முன்னணி நடிகர்களும் செல்வதாக கூறப்படுகிறது.

‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், அங்கிருந்து நேரடியாக மலேசியா வருவார் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் ‘விஜய் 62’ படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதால், விடுமுறையைக் கழிப்பதற்காக குடும்பத்துடன் சீனா புறப்பட்டுச் சென்றுள்ளார் விஜய்.

படத்தில் நடிப்பதைத் தவிர எதிலும் கலந்து கொள்ளாத அஜித், வழக்கம்போல இந்த விழாவில் கலந்து கொள்வதையும் புறக்கணித்துள்ளார். முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்த்துள்ளனர். இந்த விழாவுக்காக, இன்றும் நாளையும் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close