கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால், விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதால் நடிகர் விஜய்க்கு விநியோகஸ்தர்கள் மூலம் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்து வெளியான பிகில் படம் வசூலில் சாதனை படைத்து வெற்றிப்படமாக அமைந்ததைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். மாஸ்டர் படத்தை பெரிய பொருட் செலவில் சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கடந்த மாதம் சென்னையில், ஆடியோ லாஞ்ச் விழா நடைபெற்றது. இதையடுத்து, விஜய்யின் மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேளைகள் விரைவாக முடித்து தமிழ்ப்புத்தாண்டு ஏப்ரல் 14-ம் தேதி அல்லது அதற்கு முன்னர் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. இந்த சூழலில் தான் கொரோனா வைரஸ் மூலம் ஒரு பெரிய தடை மாஸ்டருக்கு வந்தது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதிவரை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாஸ்டர் படத்தின் ரீலீஸ் திட்டமிட்டபடி வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா நெருக்கடி மே கடைசி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கொரோனா வைரஸ் பிரச்னை முடிந்தால்தான் மாஸ்டர் படம் ரிலீஸ் செய்ய முடியும்.
இரண்டு மாதம் ரிலீஸ் தள்ளிப்போவதால் என்ன பிரச்னை என்றால், மாஸ்டர் படத்துக்கு, கடன்உடன் வாங்கி அட்வான்ஸ் கொடுத்த விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இப்போது அட்வான்ஸ் தொகையை கேட்க தயாரிப்பாளருக்கும் ஹீரோ விஜய்க்கும் பெரிய நெருக்கடி வந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித் ஆகியோரின் படங்கள் அறிவிக்கப்படும்போதே அவர்களுக்கு இருக்கும் மார்க்கெட் காரணமாக, விநியோகஸ்தர்கள் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸாக ஒரு பெரும் தொகையைக் கொடுப்பது வழக்கம்.
சினிமா ரசிகர்களாலும் திரைபட விநியோகஸ்தர்களாலும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் மாஸ்டர் படம், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே வருமானவரித்துறை சோதனையால் தடங்கல் ஏற்பட்டது.
விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்துகொண்டிருந்தபோது, முன்னதாக, வெளியான விஜய்யின் பிகில் படம் சுமார் 300 கோடிக்கு வசூலித்ததாகவும் இதில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் எழுந்த புகாரின் பேரில் வருமான வரித்துறையினர் ஏஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம், சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
பிகில் படத்தில் ஒரு பெரிய தொகையை சம்பளவமாக பெற்றார் விஜய் என்று கூறப்பட்டதால், வருமானவரித்துறை அதிகாரிகள் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
வருமானவரித்துறை பிரச்னை முடிந்த நிலையில் மார்ச் முதல் வாரத்தில் மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் எல்லாம் ஓரளவு அரசியல் நெடியுடன் பேசியபோதும், ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி விஜய் அரசியலாக எதுவும் பேசவில்லை.
பிகில் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைக் கண்கூடாகப் பார்த்த விநியோகஸ்தர்கள் பலரும் மாஸ்டர் படத்தின் வெளியிடுவதற்கு விரும்பினர். இதனால், தமிழகத்தில் உள்ள சுமார் 200 திரையரங்குகளில் மாஸ்டர் படத்தை வெளியிட, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என ஒரு பெரும் தொகையை தயாரிப்பாளரிடம் அட்வான்ஸாக அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக தமிழ் புத்தாண்டில் வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் கொரோனா நெருக்கடி முடிந்தால்தான் ரிலீஸ் ஆகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் ஆகும் என்பதால் கடன்வாங்கி அட்வான்ஸ் கொடுத்த விநியோகஸ்தர்களுக்கு கடன்கொடுத்தவர்கள் கடனைத் திரும்பக் கேட்பதால், அவர்கள் தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் தொகையைத் திரும்பக் கேட்கத் தொடங்கியுள்ளனர். விநியோகஸ்தர்கள் கொடுத்த பெரும் தொகையை உடனடியாக தரமுடியாத நிலையில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவும் உள்ளார். அதனால், மாஸ்டர் படத்துக்கு ஒரு பெரும் தொகையை சம்பளமாகப் பெற்றுள்ள விஜய்யை நோக்கி விநியோகஸ்தர்களின் அழுத்தம் திசை மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
படம் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியாதபோது, விநியோகஸ்தர்கள் ரஜினியை அணுகி இழப்பீடு பெறுவார்கள். அந்து போல, கடைசியாக வெளியான தர்பார் படத்திலும் நடைபெற்றது. ஆனால், ரஜினி இதில் கவனம் செலுத்தவில்லை. அதனால், விநியோகஸ்தர்கள் சோர்ந்துபோய் விட்டுவிட்டனர்.
அதே போல, படம் வெளியாவதற்கு முன்பே ஒரு பெரிய அட்வான்ஸ் கொடுத்து சிக்கலில் மாட்டுக்கொண்டுள்ள விநியோகஸ்தர்களை நெருக்கடியில் இருந்து மீட்க நடிகர் விஜய்யும் தயாரிப்பாளரும் முன்வர வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தூதுவிட்டு பேசி வருகின்றனர். ஆனால், வருமானவரித்துறை சோதனை நெருக்கடியால் நடிகர் விஜயும் உதவ முடியாத நிலையில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.
மாஸ்டர் ஏப்ரல் 14-ல் வெளியாகும் லாபத்தை ஈட்டலாம் என்று நம்பிதான் அட்வான்ஸ் தொகையைக் கொடுத்தோம். இந்த பாழாய்ப்போன கொரோனாவல் உலகம் முழுவதும் ஆயிரக்க் கணக்கில் பலியாகிவரும் நிலையில், மாஸ்டர் எப்போது ரிலீஸ் ஆகும் என்று நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் எங்களலை நெரிக்கும்போது, கொடுத்த அட்வான்ஸை திரும்பக் கேட்டால் தயாரிப்பாளரும் தளபதி விஜய்யும் கை விரித்தால் நாங்கள் என்னதான் செய்வது என்று திணறி வருகின்றனர்.
ஏற்கெனவே, வருமானவரித்துறை சோதனை, அரசியல் எதிர்ப்பு என எதிர்ப்புகள் சூழ்ந்துள்ள நிலையில், விநியோகஸ்தர்கள் மூலம் வந்துள்ள இப்படி ஒரு புதிய நெருக்கடியை விஜய் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று சினிமா வட்டாரத்தினரும் விநியோகஸ்தர்களும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”