Master Tamil movie review: நீண்ட காத்திருப்பிற்கு பின் உலகமெங்கும் இன்று வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம். தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி என இரண்டு பெரும் நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து அதில் எந்தவித சலனமுமின்றி வெற்றிபெற்று இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு வாழ்த்துக்கள். பல தடைகளை மீறி, பொருளாதார சிக்கல்களை சமாளித்து திரையரங்கத்தில் தான் படத்தை முதலில் திரையிட வேண்டும் என்று உறுதியோடு இருந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றிகள்; ரசிகர்கள் தங்கள் ஆஸ்தான நாயகனை திரையில் பார்த்து கொண்டாடி மகிழ்வதற்கு அவர்கள் எடுத்து கொண்ட முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…
சரி படம் எப்படி இருக்கு? கதை என்ன பாஸ் ?
கல்லூரி பேராசிரியராக அறிமுகம் ஆகும் ஜே.டி. என்கிற விஜய் ஆரம்பம் முதல் அதகளம் பண்ணுகிறார். ஆறு மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது என்று வடிவேல் ஒரு படத்தில் சொல்லுவார் அது போல ஆறு மணிக்கு மேல் ஜே.டி. பாட்டிலும் கையுமாக தான் இருப்பர். மாணவர்களின் நலன் காக்கும் ஆசிரியராக வளம் வரும் ஜே.டி அவர்களுக்காக பல சண்டைகள் போடுகிறார். கல்லூரி தேர்தல் தேவை என்பது தொடங்கி பல்வேறு விஷயங்களுக்கு மாணவர்களின் பக்கம் நிற்கும் ஜேடியை கல்லூரி நிர்வாகத்தில் சிலர் வில்லனாகவும் மாணவர்கள் ஹீரோவாகவும் பார்க்கிறார்கள். கல்லூரி தேர்தல் விவகாரத்தில் அடிதடி நடக்க அதற்கு பொறுப்பேற்று ஜே.டி. அந்த வேலையை ராஜினாமா செய்கிறார், வேறு ஒரு இடத்திற்கு வேறு ஒரு பணிக்காக செல்கிறார் அங்கே தான் இவருக்கும் பவானி என்கிற விஜய்சேதுபதிக்கும் உரசல்கள் தொண்டங்குகின்றன..
சிறு வயதிலேயே குடும்பத்தை இழந்து செய்யாத தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படும் பவானி சமூகத்தின் சிலரால் தூண்டிவிடப்பட்டு பின்பு அணைத்து விதமான சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடுகிறான். பின்பு அவனே அதற்கு தலைவனும் ஆகிறான். தான் வளர்ந்த சீர்திருத்தப் பள்ளியைச் சேர்ந்த சிறுவர்களை தன் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்துகிறான். சட்டம், போலீஸ் அனைத்தையும் தன் கைப் பிடியில் வைத்துக்கொண்டு ராஜாங்கம் செய்கிறான்..
இந்த சீர்திருத்தப் பள்ளிக்கு வரும் ஜே.டி ஜாலியாக தன் பொழுதை கழிக்கிறார், ஒரு கட்டத்தில் இந்த வளாகத்தில் என்ன நடக்கிறது, எப்படி சிறுவர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்பதை உணரும் ஜே.டி இந்த மொத்த சிறுவர்களையும் எப்படி நல்வழிப்படுத்துகிறார், பவானியின் சாம்ராஜ்யத்தை எப்படி அழிக்கிறார் என்பதே மாஸ்டர்!
தன்னுடைய பலம் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்கும் விஜய் புகுந்து விளையாடியிருக்கிறார். முதல் பாதியில் குடித்து கும்மாளம் போடும் காட்சிகளிலும் சரி இரண்டாம் பகுதியில் சீர்திருத்தப் பள்ளி மாணவர்களை அவர்களின் தவறான பழக்க வழக்கங்களிலிருந்து அவர்களை திருத்தி இந்த சமுதாயத்தில் அவர்கள் மீண்டும் ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழலாம் என்று உணர்த்தும் காட்சிகளிலும் சரி, விஜய் கைதட்டல்களை அள்ளுகிறார். ஒவ்வொரு முறையும் தான் ஏன் குடிக்கு அடிமை ஆகிவிட்டேன் என்று அவர் சொல்லும்போது ஒவ்வொரு முறையும் எதாவது பழைய படத்தின் கதையை சொல்லுவது என்று ரகளை செய்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் டி.ஆர். போன்று நடனம் ஆடுவதெல்லாம் வேற லெவல் அலப்பறை!
ஆனால், விஜய் போன்ற ஒரு பெரிய ஹீரோ படத்தில் ‘Effort Less’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், அது போல மிக சாதாரணமாக படம் முழுக்க வளம் வந்து விஜய்யை ஓவர்டேக் செய்துள்ளார் நடிப்பு அசுரன் விஜய்சேதுபதி.
மாஸ் ஹீரோ படத்தில் வரும் வில்லன்கள் போன்று ஆ.. ஊ.. என்று கத்திக்கொண்டு சுற்றாமல் சைலெண்டாக தனக்குரிய ஸ்டைலில் அபாரமாக நடித்துள்ளார். வில்லன் -ஹீரோ என்று இரண்டும் ஒரே கால கட்டத்தில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அதை வெகு சுலபமாக செய்து முடிக்கிறார் விஜய்சேதுபதி.
நாயகி மாளவிகா மோஹனன் ஒரு சில காட்சிகளில் தோன்றுகிறார். மாஸ் ஹீரோ படம் பாஸ், நாயகிகளுக்கு என்று தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்?
மற்ற கதாபாத்திரங்களான ஆண்ட்ரியா, சாந்தனு பாகியராஜ், மகேந்திரன் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் கட்சித்தகமாக நடித்திருக்கிறார்கள். சிம்மக் குரலுக்கு சொந்தக்காரரான அர்ஜுன் தாஸ் தனியாக படத்தில் தெரிகிறார். விஜய்-விஜய்சேதுபதிக்கு பிறகு, இவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது அதை அவரும் சிறப்பாக செய்திருக்கிறார்.
இத்தனை பாசிட்டிவ் விஷயங்கள் படத்தில் இருந்தாலும், படத்தின் கதை மற்றும் திரைக்கதை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே எதார்த்தம். பாத்திரங்கள் சிறப்பாக அமைந்திருந்தாலும் அவர்களை சுற்றி சுழலும் கதை நமக்கு பல முந்தைய திரைப்படங்களை நினைவூட்டுகிறது .மாநகரம், கைதி போன்ற படைப்புக்களை தந்த லோகேஷ், இந்த படத்தில் சிறிது compromise செய்துவிட்டார் என்று தான் தோன்றுகிறது.
அனிருத்தின் இசை மிரட்டுகிறது. ‘வாத்தி கம்மிங்’ பாடல் ஆட்டம் போடும் வைக்கும் என்றால், ‘குட்டி ஸ்டோரி ‘ மற்றும் ‘Quit பண்ணுடா’ ரசிக்கும் வண்ணமாக இருந்தது. பின்னணி இசையும் பல இடங்களில் பட்டாசு ரகம்.
மொத்தத்தில் ‘மாஸ்டர்’ மாஸ் படம் என்று எக்கச்சக்கமாக மசாலாவை தூவி ரசிகர்களை சங்கடப்படுத்தாமல் தேவையான அளவு தூவி கைதட்டல் வாங்கியுள்ளது.