‘மெர்சல்’ படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை டிக்கெட் புக்காகிவிட்டது என்கிறார்கள். வேறு எந்த பெரிய படங்களும் ரிலீஸ் ஆகாததால், ‘மெர்சல்’ படத்துக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.
‘மெர்சல்’ படத்தின் ஆரம்பக் காட்சியில், சென்னையில் இருந்து ஃபிரான்ஸுக்குச் செல்வார் விஜய். அவர் கறுப்பாக இருப்பதாலும், வேஷ்டி - சட்டை அணிந்திருப்பதாலும் அவரை சந்தேகப்பட்டு ஃபிரான்ஸ் விமான நிலையத்தில் விசாரிப்பார்கள். அவருடைய வேஷ்டி - சட்டையை கழட்டிக்கூட விசாரணை நடைபெறும்.
அப்போது கூல் ட்ரிங்க்ஸ் குடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண் மயங்கி விழுந்துவிடுவார். டாக்டரான விஜய், அவரைக் காப்பாற்றுவார். அவரைத் தவறாக நினைத்ததற்காக அங்குள்ளவர்கள் விஜய்யிடம் மன்னிப்பு கேட்பார்கள். விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண், அவர்களுக்காக விஜய்யிடம் மன்னிப்பு கேட்பார்.
அத்துடன், ‘நீங்கள் வேஷ்டி - சட்டை அணிந்ததால்தான் இப்படி உங்களைத் தவறாக நடத்தினர். எனவே, இனிமேல் அதை அணிய வேண்டாம்’ என்று கூறுவார். அதை மறுக்கும் விஜய், ‘கமல்ஹாசன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்றவர்களைக் கூட விமான நிலையத்தில் இப்படி அவமரியாதையாக நடத்தியிருக்கிறார்கள். அதற்குப் பயந்து என் வேஷ்டி - சட்டையை விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்பார் விஜய்.