விஜய்யின் 62வது படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபுதேவா இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான படம் ‘வில்லு’. இந்தப் படத்தில்தான் விஜய்க்கு ஜோடியாக முதன்முதலில் நடித்தார் நயன்தாரா. அவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த முதல் படமும் இதுதான். அதற்கு முன்னர் ‘சிவகாசி’ படத்தில் இடம்பெற்ற ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலுக்கு மட்டும் விஜய்யுடன் டான்ஸ் ஆடியிருந்தார்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்துவரும் நயன்தாரா, இன்றைக்கு நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். இந்நிலையில், விஜய்யின் 62வது படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’ படத்தில், இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் நயன்தாரா. அந்தப் படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு கூட டான்ஸ் ஆடியிருந்தார். தன்னை ஒரு ஐட்டம் டான்ஸராகக் காட்டியதால், ஏ.ஆர்.முருகதாஸ் மீது நயன்தாரா கோபமாக இருந்ததாகவும், விஜய் கேட்டுக் கொண்டதால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பொங்கலுக்குப் பிறகு ஷூட்டிங் செல்ல இருக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தில், காமெடியனாக யோகி பாபு கமிட்டாகியிருக்கிறார். அடுத்த வருடம் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படமும் தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.