நீட் தேர்வால் டாக்டராக முடியாமல் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் நினைவாக 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குகிறார் விஜய் சேதுபதி.
எல்லா விளம்பரப் படங்களிலும் நடிக்காமல் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் சேதுபதி, அணில் சேமியா நிறுவனத்தின் புதிய விளம்பரத்தில் நடித்துள்ளார். அதற்காகப் பெற்ற ஊதியத்தின் ஒரு பகுதியை, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலவிட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் உள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 38 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 5 லட்ச ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஹெலன் ஹெல்லர் செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 49 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்ய இருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்த நிதியுதவியை தமிழக அரசிடம் வழங்கி, அவர்கள் மூலமாக உதவிசெய்ய இருக்கிறார் விஜய் சேதுபதி. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு டாக்டருக்குப் படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட அரியலூரைச் சேர்ந்த அனிதாவின் நினைவாக இந்த நிதியுதவியை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.