15வது சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில், விஜய் சேதுபதிக்கு ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, கடந்த 14ஆம் தேதி தொடங்கி நேற்று (டிசம்பர் 21) முடிவடைந்தது. சென்னையில் உள்ள தேவி, தேவிபாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் ஃபிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆஃப் சயின்ஸ் அண்ட் கல்ச்சர் ஆகிய தியேட்டர்களில் படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா, நேற்று மாலை தேவி தியேட்டரில் நடைபெற்றது. கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த திரைப்பட விழாவில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதைப்பெற ‘8 தோட்டாக்கள்’, ‘மாநகரம்’, ‘அறம்’, ‘கடுகு’, ‘குரங்கு பொம்மை’, ‘மகளிர் மட்டும்’, ‘மனுசங்கடா’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘ஒரு குப்பைக்கதை’, ‘தரமணி’, ‘விக்ரம் வேதா’, ‘துப்பறிவாளன்’ ஆகிய 12 படங்கள் போட்டி போட்டன.
அதில், ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்துக்கு முதல் பரிசு பெற்றது. மாதவன் - விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படத்துக்கு இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது. நடுவர் குழு சிறப்பு விருதை, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ பெற்றுள்ளது. நடுவர் குழுவின் சிறப்பு சான்றிதழை, ‘குரங்கு பொம்மை’ படத்தில் நடித்ததற்காக இயக்குநர் பாரதிராஜாவுக்கு வழங்கப்பட்டது.
மாணவர்கள் இயக்கிய சிறந்த படத்துக்கான ‘அம்மா’ விருது, ‘டெய்சி’ படத்தை இயக்கிய நாராயணமூர்த்திக்கு கிடைத்தது. இந்தப் படத்தை, எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரி தயாரித்துள்ளது. இந்த விழாவில், ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான்’ விருது, நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.