'நான் அரசியலுக்கு கண்டிப்பா வருவேன்'-னு இதுவரை ஒருவார்த்தை கூட ரஜினி கூறவில்லை. தன் ரசிகர்களிடம் மட்டும் 'போர் வரும் போது சொல்கிறேன்' என்றார். ஆனால், அதற்குள் 'போதும்...சினிமாக்காரர்கள் தமிழகத்தை ஆண்டது போதும்' என்று விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அது ஒருபக்கம் இருக்கட்டும்.
இந்தச் சூழ்நிலையில், நேற்று நடந்த 'பிஃகைன்ட்வுட்ஸ்' கோல்ட் மெடல் விருது வழங்கும் விழாவில் 'இளைய தளபதி' விஜய் கலந்து கொண்டார். 1996 முதல் தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் அதிக ஹிட் கொடுத்த படங்களில் விஜய் நடித்துள்ளார். இதற்காக 'தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிசின் சாம்ராட்' எனும் விருது விஜய்க்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த விருதைப் பெற்றுக்கொண்டு விழாவில் பேசிய விஜய் "மூன்று வேளையும் தவறாமல் உணவு கிடைப்பதால் அதைப் பற்றிய கவலையே இல்லாமல் எல்லோரும் இருக்கிறோம். ஆனால், அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகள் நன்றாக இல்லை. அவர்கள் இலவச அரிசிக்காக ரேஷன் கடைசியில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். இப்படி விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.
வல்லரசு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம். வல்லரசு ஆவதெல்லாம் இருக்கட்டும். முதலில் நல்லரசு கொடுங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாருங்கள்" என்று பேசியிருக்கிறார்.
ஒரு இந்திய குடிமகனாக விஜய் மிகச்சரியாக பேசியிருக்கிறார். ஆனால், வருங்காலத்தில் விஜய் அரசியலுக்கு வருவார் என்றே கூறப்படுகிறது. அதற்காக தனது ரசிகர்கள் மன்றங்களை ஒருங்கிணைத்து நற்பணி இயக்கமாகவே மாற்றிவிட்டார். அப்படியிருக்கும் போது 'சினிமாக்காரன் தமிழகத்தை ஆளக்கூடாது' என்று ரஜினியை விமர்சிக்கும் நபர்கள், விஜய்யின் இந்த பேச்சுக்கும் எதிர்ப்புக் குரல் கொடுத்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.