விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பொன்மகள் வந்தாள்’ சீரியலில் கதாநாயகன் – கதாநாயகியாக நடித்த விக்கி – மேக்னா இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சமூக ஊடகங்களில் செய்தி வைரலானதைத் தொடர்ந்து, விக்கி இந்த தகவல் வதந்தி என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை மேக்னா. டிவி சீரியலில் மட்டுமல்லாமல், கயல், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றவர். கேரளாவைச் சேர்ந்த மேக்னா, 2017-ம் ஆண்டு டான் டோனி என்பவரை திருமணம்செய்துகொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரம் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்த நிலையில், பொன்மகள் வந்தாள் சீரியலில் மேக்னாவுடன் நாயகனாக நடித்த விக்கி மேக்னாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமூக ஊடகங்களில் வைரலானது.
வாணி ராணி, இளவரசி, பொன்மகள் வந்தாள் ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விக்கி. இவர் நடிகை ஹரிப்ரியாவை பல ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். விக்கி – ஹரிப்பிரியா தம்பதிக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ளான்.
விக்கியுடன் ஜோடியாக நடித்த மேக்னா அண்மையில் விவாகரத்து பெற்றதைத் தொடர்ந்து, விக்கியும் விரைவில் விவாகரத்து பெற்று மேக்னாவை திருமணம் செய்துகொள்ளப்போவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி வைரலானது.
இதற்கு மறுப்பு தெரிவித்து ஊடகங்களிடம் பேசிய நடிகர் விக்கி, “கடந்த சில மாதங்களாகவே இப்படி ஒரு வதந்தி பரவி வருகிறது. ஒரு சீரியலில் நாயகன் – நாயகியாக இருவர் இணைந்து நடித்தால் உடனே அவர்கள் நிஜத்தில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று பேசத் தொடங்குகின்றனர். எல்லோர் குடும்பத்திலும் சிறு சிறு சண்டைகள் இருக்கத்தான் செய்யும். நடிகர்கள் குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல. நானும், மேக்னாவும் நல்ல நண்பர்கள். இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே இருவரும் சேர்ந்து தெளிவாகக் கருத்து கூறியிருந்தோம். அதை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளேன். இப்போதும் அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். எனக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவனது எதிர்காலத்தையும் நான் யோசிக்க வேண்டும். தேவையில்லாமல் எங்கள் வாழ்க்கையைச் சீர்குலைக்காதீர்கள். கொரோனா பொதுமுடக்க காலத்தில் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பது பற்றி யோசிக்கலாம். இதுபோன்ற தேவையில்லாத வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறிய விக்கி, மேக்னா உடன் திருமணம் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.