பிரம்மாண்டத்தின் உச்சமாய் திகழ்ந்த 'பாகுபலி' சீரிஸின் இயக்குனர் என்னவோ ராஜமவுளி தான். ஆனால், பாகுபலியின் இரண்டு பாகங்களுக்கும் திரைக்கதை வடிவமைத்தவர் ராஜமவுளியின் தந்தை ராஜேந்திர பிரசாத். பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார்? என்பதில் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும், இரண்டாம் பாகம் ஃப்ளாப் ஆகியிருக்கும். அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்தவர் ராஜேந்திர பிரசாத் தான். திரைக்கதை வடிவமைப்பதில் கில்லாடியான இவர், இளையதளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கும் திரைக்கதை அமைத்துள்ளார்.
இப்படம் குறித்து ராஜேந்திர பிரசாத் அளித்துள்ள பேட்டியில், "இந்தப் படத்தில் உள்ள உணர்வுப்பூர்மான காட்சிகள், மக்களை பெருமளவில் ஈர்க்கும். 'மெர்சல்' படத்தில் வரும் காட்சிகளை ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கைதட்டி வரவேற்பார்கள்.
அட்லீயின் இரண்டு படங்களும் எனக்கு மிகவும் பிரியமானவை. ஒரு கதைக்கான யோசனையுடன் அட்லீ என்னை அணுகினார். அந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை திரைக்கதையாக உருவாக்கினேன். அப்படித் தான் 'மெர்சல்' உருவானது" என்று தெரிவித்துள்ளார்.
கிராமத்து இளைஞர், மருத்துவர் மற்றும் மேஜிக் நிபுணர் என மூன்று வேடங்களில் நடித்துள்ளார் விஜய். நித்யாமேனன், காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் 20-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த படக்குழு தீர்மானித்துள்ளது. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
இன்னும் 5 நாட்கள் மட்டுமே இப்படத்தின் ஷூட்டிங் மீதமுள்ளது என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரே ஒரு பாடல் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பாக, படத்தின் எடிட்டிங் பணிகளை முடித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் பின்னணி இசைக்கு அளிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.