மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா அனுமதி சான்று கிடைத்துள்ளது. இதனால், திட்டமிட்டப்படி தீபாவளியன்று மெர்சல் வெளியாகும் என தெரிகிறது.
விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் பயன்படுத்தப்பட்ட புறா கிராஃபிக்ஸ் செய்யப்பட்டதுதான் என்பதற்கான ஆதாரத்தைப் படக்குழுவினர் சமர்ப்பிக்கத் தவறியதாலும், ராஜநாகத்தைப் பயன்படுத்திவிட்டு, அதன் பெயரை நாகப்பாம்பு என்று தவறாகக் குறிப்பிட்டதாலும், படத்துக்கான விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா அனுமதிச்சான்று கிடைக்கத் தவறியது.
ஆனால், சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கொடுத்திருப்பதாக படத்தின் இயக்குநர் அட்லீ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, ‘எங்கள் சான்றிதழ் இல்லாமல் எப்படி சென்சார் கொடுக்கலாம்’ என சென்சார் போர்டையும் கேள்விக்கு உள்ளாக்கியது விலங்குகள் நல வாரியம். ஆனால், ‘சென்சார் சான்றிதழை இன்னும் கொடுக்கவில்லை. வாய்மொழியாக மட்டுமே சொல்லியிருக்கிறோம்’ என்று ஜகா வாங்கியது சென்சார் போர்டு.
இதனால், விலங்குகள் நலவாரியத்திடம் இருந்து அனுமதி சான்றிதழ் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. படத்தின் தயாரிப்பாளர் தரப்பு, எவ்வளவோ முயன்றும் இச்சிக்கலை தீர்க்க முடியவில்லை. இதையடுத்து, நேற்று(அக்.15) நடிகர் விஜய், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று சந்தித்து, சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார்.
இந்த நிலையில், இப்பிரச்சனை குறித்து முடிவு செய்ய, சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள விலங்குகள் நல வாரியத்தின் அலுவலகத்தில் இன்று காலை அவசர கூட்டம் நடைபெற்றது. விலங்குகள் நல வாரிய அதிகாரிகளான மதியழகன், வினோத் குமார், பரத் குமார், ஷ்ரவன் கிருஷ்ணன், தினேஷ் பாபா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. தொடர்ந்து, சென்சார் போர்டும் அனுமதி அளிக்கும் பட்சத்தில், திட்டமிட்டபடி தீபாவளியன்று (அக்.,18) மெர்சல் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
விஜய்யின் வேண்டுகோளை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலையீட்டால், இன்று மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல அமைப்பிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.