விக்ரம் நடித்துவரும் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருப்பதால், அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
முன்னணி நடிகர்களுள் ஒருவரான விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘இருமுகன்’. விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படம், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸானது. கடந்த வருடம் விக்ரம் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸாகவில்லை. ஆனால், இந்த வருடம் விக்ரம் நடிப்பில் இதுவரை 3 படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.
‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் – தமன்னா இருவரும் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில், வடசென்னையில் வசிக்கும் மெக்கானிக்காக நடித்துள்ளார் விக்ரம்.
இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வருகிற 12ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
தற்போது ஹரி இயக்கத்தில் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். 2003ஆம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துவரும் இந்தப் படத்தில், வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். காரைக்குடியில் இதன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்தப் படத்தை வெளியிடுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், ‘சாமி’ ரிலீஸான மே 1ஆம் தேதியே இரண்டாம் பாகத்தையும் வெளியிடலாம் என்ற முடிவைத் தற்போது படக்குழுவினர் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படமும் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்தப் படம், இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
ஆனால், ஏற்கெனவே கிடப்பில் கிடந்த தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை முடிப்பதில் பிஸியாக இருக்கும் கெளதம் மேனன், அது முடிந்ததும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தையும் முடிப்பார் என்று தெரிகிறது. எனவே, இந்த வருடம் அடுத்தடுத்து விக்ரம் படங்கள் ரிலீஸாக இருப்பதால், அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.