விக்ரம் பிரபு நடிக்கும் ‘துப்பாக்கி முனை’ படத்தில், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.
மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா மோத்வானி, பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ‘எங்கேயும் காதல்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக தமிழில் அறிமுகமானார். பின்னர், தனுஷுடன் ‘மாப்பிள்ளை’, விஜய்யுடன் ‘வேலாயுதம்’, உதயநிதி ஸ்டாலினுடன் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என பல படங்களில் நடித்துள்ளார்.
ஆர்யா, சூர்யா, விஷால், கார்த்தி, சித்தார்த், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோருடன் நடித்த ஹன்சிகாவுக்கு, ஒருகட்டத்தில் படமே இல்லை. ஹன்சிகாவின் வெள்ளைத்தோலைப் பார்த்து அவரைத் தன் படங்களில் புக் செய்தவர்கள் அதிகம். ஆனால், அவருக்கு சரியாக நடிக்கத் தெரியாததால், ஒருகட்டத்தில் அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை.
தனக்குத் தெரிந்த நடிகர்கள், இயக்குநர்கள் என எல்லோரிடம் போன் போட்டு வாய்ப்பு கேட்டார் ஹன்சிகா. அதன் பலனாக, ஹன்சிகாவைத் தமிழில் அறிமுகப்படுத்திய பிரபுதேவா தான் ஹீரோவாக நடித்த ‘குலேபகாவலி’ படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தார். அந்தப் படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. அதன்பிறகு எந்தப் படமும் கைவசம் இல்லாத நிலையில், புதிதாக ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ஹன்சிகா.
விக்ரம் பிரபுவின் 12வது படமான ‘துப்பாக்கி முனை’யில், ஹீரோயினாக ஹன்சிகா நடிக்கிறார். இந்தப் படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். இவர் மணிரத்னத்திடம் அசோசியேட்டாகப் பணியாற்றியவர். இந்தப் படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். என்கவுண்டர் போலீஸாக இந்தப் படத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு.