சென்னையில் 36.34 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட வில்லிவாக்கம் ஏரி , மக்களின் அடுத்த பொழுதுபோக்கு அம்சமாக களமிறங்க இருக்கிறது. இந்த ஏரிக்கு தெற்கே, அதிக மக்கள்தொகை கொண்ட சிட்கோ நகர், மற்றும் ஓட்டேரி நுல்லாவில் வடிகால் அமைந்துள்ளது. இந்த ஏரி சென்னை மெட்ரோ குடிநீர் கழகம் மற்றும் கழிவுநீர் வாரியத்திற்கு சொந்தமானது.
அப்படியான இந்த ஏரியில் மார்ச் முதல் வாரத்தில் இருந்து படகு சவாரி, பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை கொண்டுவர முடிவு செய்திருக்கின்றனர். ரூ. 45 கோடி மதிப்பீட்டில் ஏரியை சீரமைத்து, அதன் மீது தொங்கு பாலம் கட்டவும், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் பொழுதுபோக்கு பூங்காவும் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
ஏரிக்கரையில் வசித்திருந்த சுமார் 275 குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த வாரம் சுமார் 75 குடும்பங்கள் இடம்பெயர்ந்தனர், மேலும் 60 குடும்பங்களுக்கு விரைவில் வீடுகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி இறுதிக்குள், மீதமுள்ள 140 குடும்பங்கள் கே.பி. பார்க்கில் குடியமர்த்தப்படுவார்கள்.
பொழுதுபோக்கு பூங்காவை நடத்துவதற்கு உரிமைப் பெற்றுள்ளது சி.கே. என்டர்டைன்மெண்ட். இந்த நிறுவனம் மாநகராட்சிக்கு ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து, தொங்கு பாலம், ஏரியில் உள்ள சிறு தீவுகளில் உணவகங்கள், ஆம்பித்தியேட்டர், மீன்வளம் மற்றும் பிற சவாரிக்கு போன்றவை கட்டுவதற்கு செலவு செய்கின்றனர்.
250 மீட்டர் நீளத்தில் 12.5 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் தொங்கு பாலத்தின் பணி பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் நிறைவடையும். சிங்கப்பூரில் உள்ள மேக்ரிச்சி ட்ரீடாப் வாக் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பாலத்தில் படிகள் மக்களின் வசதிக்கு ஏற்ப அமைக்கப்படுகிறது.
மார்ச் முதல் வாரத்தில் ஏரியில் படகு சவாரி செய்வதற்காக பொதுமக்களுக்கு திறந்துவிடப்படும் என்றும், மே மாதத்திற்குள் பொழுதுபோக்கு சவாரிகள் தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil