மறுபடியும் தள்ளிப் போகிறது விஷாலின் ‘இரும்புத்திரை’

விஷால் நடிப்பில் உருவாகிவரும் ‘இரும்புத்திரை’ படத்தின் ரிலீஸ் தேதி, மறுபடியும் தள்ளிப் போயிருக்கிறது.

விஷால் நடிப்பில் உருவாகிவரும் ‘இரும்புத்திரை’ படத்தின் ரிலீஸ் தேதி, மறுபடியும் தள்ளிப் போயிருக்கிறது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

‘இரும்புத்திரை’ முதலில் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘ஸ்கெட்ச்’ மற்றும் ‘குலேபகாவலி’ ஆகிய படங்களே மொத்த தியேட்டர்களையும் ஆக்கிரமித்துக் கொண்டதால், போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே, ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.

ஆனால், 26ஆம் தேதி ரிலீஸில் இருந்தும் பின்வாங்கியுள்ளது ‘இரும்புத்திரை’. ‘இந்த முறையும் தியேட்டர் கிடைக்கவில்லை’ என பழைய பல்லவியையே பாடுகின்றனர் விஷால் தரப்பினர். உண்மை என்னவென்றால், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்னும் முடியவில்லை. விஷால் மற்றும் அர்ஜுன் இருவருமே இன்னும் டப்பிங் பேசவில்லையாம். ஆனால், அதற்குள் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு, பிறகு மாற்றி வருவது ஏன் என்று தெரியவில்லை.

தற்போது பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்க முடிவு செய்துள்ளனர். சாய் பல்லவியின் ‘கரு’, ஜோதிகாவின் ‘நாச்சியார்’, ஜீவா – நிக்கி கல்ரானியின் கீ’, இயக்குநர்கள் ராம் மற்றும் மிஷ்கின் நடிப்பில் ‘சவரக்கத்தி’ ஆகிய 4 படங்கள் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதில், ஐந்தாவதாக தன்னுடைய படத்தை விஷால் எப்படி இணைப்பார் என்று தெரியவில்லை. அடுத்த முறை அறிவிக்கும் ரிலீஸ் தேதியாவது மாறாமல் இருக்கட்டும்.

×Close
×Close