ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ படம் ரிலீஸாகும் 26ஆம் தேதி, தன்னுடைய ‘இரும்புத்திரை’ படத்தை ரிலீஸ் செய்கிறார் விஷால்.
ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘2.0’, ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் முடியாததால், ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விடுமுறையில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய நடிகர்கள் போட்டி போடுகின்றனர்.
ஜெயம் ரவி நடிப்பில், சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிக் டிக் டிக்’ படம், ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்கள் இணைந்துள்ள படம் இது. ‘இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்’ என்று சொல்லப்படும் இந்தப் படத்தில், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஆரோன் ஆசிஸ், வில்லனாக ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவியின் மகன் ஆரவ், ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும், ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படம், 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ளது.
ஜனவரி 26ஆம் தேதி, விஷால் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படமும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படம், முதலில் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளார்.
ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்த இரண்டு படங்களுடன், அனுஷ்கா நடித்த ‘பாகுமதி’ படமும் ரிலீஸாகிறது. தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறது. மேலும், சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் ‘கரு’ படமும் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.