அஜித் – சிவா கூட்டணி மீண்டும் இணைய விஸ்வாசமே காரணம்! – மனம் திறக்கும் விஸ்வாசம் பாடலாசிரியர் அருண் பாரதி!

சென்னையில் தெருவோரக் கடைகளைத் தாண்டி, நல்ல ஹோட்டலில் கூட உட்கார்ந்து சாப்பிடாத நான், பாக்யராஜ் சார் வீட்டின் டைனிங் டேபிளில் தான் முதன் முதலாக உட்கார்ந்து சாப்பிட்டேன்

விஸ்வாசம், அஜித் குறித்து பாடலாசிரியர் அருண் பாரதி
விஸ்வாசம், அஜித் குறித்து பாடலாசிரியர் அருண் பாரதி

கேள்வி, கட்டுரை : அன்பரசன் ஞானமணி

மண் சார்ந்த, மலை சார்ந்த, மொழி சார்ந்த, வயல் சார்ந்த, விவசாயம் சார்ந்த வாய்க்கால் வரப்பு சார்ந்த, வலி சார்ந்த ஒரு எழுத்தாளரை, கவிஞரை, விஸ்வாசம் பட பாடலாசிரியரை சந்தித்தேன்.

அவர், அருண் பாரதி!

மொழி, சமூகம், வலி, வேதனை, உண்மை, அஜித், விஸ்வாசம் என அவர் வெளிப்படுத்திய உணர்வுகள் அத்தனையும் இதோ உங்கள் ரசனைக்கேற்ப,

பாடலாசிரியர் ஆவதற்கு முன்பு அருண் பாரதியின் வாழ்க்கை எத்தகையது?


சினிமாவில் உங்கள் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் யார்?

என் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பலர் இருக்கிறார்கள். அதில் குறிப்பாக என் ஆசான் இயக்குநர். கே. பாக்யராஜ் சார் அவர்களை முதலில் சொல்ல வேண்டும்.

முதலில் ‘பாக்யா’ வார இதழில் அவ்வப்போது கவிதைகள் எழுதி வந்தேன். என் மீது அன்பு கொண்ட அந்தப் பத்திரிக்கையில் பணியாற்றிய அய்யா. திருஞானம் அவர்கள் எனது மண் சார்ந்த கவிதை ஒன்றை பாக்யராஜ் சாரிடம் கொடுத்திருக்கிறார். அதைப்படித்த பாக்யராஜ் சார், ‘யாருய்யா இதை எழுதுனது? அவனை உடனே வரச் சொல்.. நான் பார்க்கணும்’ என்றார். உடனே நான் அவரை பார்க்கச் சென்ற போது, கவிதைய பாத்துட்டு நான் கூட ரொம்ப வயசானவரா இருப்பார்னு நினைச்சேன். பரவாயில்ல சின்னப் பையனாத்தான இருக்க. சினிமாவுக்கு பாட்டு எழுதுற ஆர்வம் இருக்கா என்றார்.

அனிச்சை செயலாக உடனே தலையாட்டினேன். ஆமாம் சார் என்று. “சரி
உனக்கு கவிதை எழுத வருது… சினிமாவுக்கு பாடல் எழுத வருதான்னு பார்க்கலாம். பா.விஜய்-லாம் என்னிடம் இருந்து தான் பாடல் எழுத கற்றுக் கொண்டுச் சென்றார்கள். அதனால், நீயும் என்னிடம் இருந்து பாடல் எழுத கற்றுக் கொள்’ என்று சொல்லி, மூன்று பிரபல தமிழ் பாடல்களை என்னிடம் கொடுத்து, அந்த இசைக்கு ஏற்றவாறு வேறு வார்த்தைகளை போட்டு எழுதி எடுத்து வரச் சொன்னார்.

‘உருகுதே.. மருகுதே’ , ‘ஜூன் போனால் ஜூலை காற்றே’, ‘வாழ்க்கைய யோசிங்கடா… தலையெழுத்த நல்லா வாசிங்கடா’ ஆகிய இந்த மூன்று பாடல்களுக்கு டம்மி வார்த்தைகள் எழுதி அவரிடம் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு, ‘பரவாயில்லை 70 – 80 சதவிகிதம் கரெக்டா மேட்ச் பண்ணிட்ட’ என்று சொல்லி அவருடன் என்னை சேர்த்துக் கொண்டார். மூன்று ஆண்டுகள் அவரது மெட்டுகளுக்கு வரிகள் எழுதி, பாடல் எழுத கற்றுக் கொண்டேன்.

அதுவரை, சென்னையில் தெருவோரக் கடைகளைத் தாண்டி, நல்ல ஹோட்டலில் கூட உட்கார்ந்து சாப்பிடாத நான், பாக்யராஜ் சார் வீட்டின் டைனிங் டேபிளில் தான் முதன் முதலாக உட்கார்ந்து சாப்பிட்டேன்.

சினிமாவில் முதன் முதலாக எனக்கு புது டிரஸ் எடுத்துக் கொடுத்தது கூட பாக்யராஜ் சார் தான். அவர் வீட்டில்தான் முதன்முதலாக ஆர்மோனிய பெட்டியையும், கீபோர்டையும் கண்களால் பார்த்தேன். இப்படி பல முதன்முதல் விஷயங்களை எனக்கு அவர்தான் ஏற்படுத்திக் கொடுத்தார்.

அதன்பிறகு, என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர். விஜய் ஆண்டனி சார். எனக்கு ‘அண்ணாதுரை’ படத்தில் அனைத்து பாடல்களையும் எழுத வாய்ப்புக் கொடுத்து எனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதனால், விஜய் ஆண்டனி சாருக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

அதேபோல் கவிஞர் அறிவுமதி அண்ணன் இயக்குனர் லிங்குசாமி அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்த, நான் சில வரிகள் எழுதிக் காண்பித்தேன். உடனே என் மீது நம்பிக்கை வைத்த லிங்குசாமி அண்ணன் எனக்கு ‘சண்டக்கோழி-2’ படத்திற்கு பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார்.

அந்தப் படத்திற்கு பாடல் எழுதிக் கொண்டிருக்கும் போதே, சற்குணம் சார் எனக்கு ‘களவாணி-2’ படத்திற்கு பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார். இந்த தருணத்தில்தான் அனைத்திற்கும் உச்சமாக என்மீது நட்சத்திர வெளிச்சத்தை பாய்ச்சினார் சிவா சார். ஆம் சிவா சாரும் அஜித் சாரும் இணையும் ‘விஸ்வாசம்’ படத்தில் பாடல் எழுத எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்.

இப்படி சினிமாத் துறையைச் சார்ந்த இந்த நல்ல உள்ளங்கள் கொண்ட அனைவரும், என்னை ஒரு பாடலாசிரியராக அறிமுகம் செய்து, வாய்ப்பளித்து என்னை ஊக்குவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் நான் ஆயுள் முழுதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

‘ஷூவுக்கு ஏற்றவாறு பாதத்தை வெட்டக் கூடாது’ என்று சொல்வது போல இசைக்கு ஏற்றவாறு வரிகள் எழுதச் சொல்வது குறித்து உங்கள் கருத்து என்ன?

இப்படியொரு கேள்வி என்னிடம் இதுவரை யாரும் கேட்டதில்லை!. ஒருபாடல் என்பது அனைவருக்கும் போய்ச் சேர வேண்டிய விஷயம். நல்ல கதைக்களம் உள்ள படங்களில், வரிகளுக்கு ஏற்ப இசை அமைத்தால் நல்லது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

விஸ்வாசம் பாடலாசிரியர் அருண் பாரதி
விஸ்வாசம் பாடலாசிரியர் அருண் பாரதி

அதேசமயம், ரசிகர்கள் கமர்ஷியலாக கொண்டாடும் சில படங்களுக்கு மெட்டுக்கு ஏற்ப பாடல் எழுதுவதில் தவறில்லை.

சில சமயங்களில் மெட்டுக்களை கேட்கும் போது, நமக்கே தோன்றாத சில வார்த்தைகள் அங்கே வந்து விழும். அதுவும் நல்ல விஷயம் தானே இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும் உள்ள புரிதலில் இது அடங்கி இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை எளிமையாக, மக்களுக்கு புரியும் வகையில் பாடல்கள் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அதற்கு மெட்டுக்கு பாடல் எழுதினாலும் சரி, பாடலுக்கு மெட்டமைத்தாலும் சரி.

ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம் வழங்கிய உச்சநீதிமன்ற உத்தரவை ஒரு கவிஞராக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஓரினச் சேர்க்கை என்பது தனி மனித விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. அது என்னைப் பொறுத்தவரை தவறில்லை, பிரச்சனையுமில்லை.

ஆனால், எதிர்காலத்தில் எந்த இயக்குனராவது ஓரினச் சேர்க்கை குறித்து என்னை பாடல் எழுதச் சொன்னால் நிச்சயம் மறுத்துவிடுவேன்.

‘விவேகம்’ படத்தின் தோல்விக்குப் பிறகும், சிவா – அஜித் கூட்டணி இணைந்த காரணம் என்ன?

வேறென்ன, விஸ்வாசம் தான். அந்த விஸ்வாசம் வெற்றி தோல்விக்கெல்லாம் அப்பாற்பட்டது.

(வெறித்தனமாக உழைக்கும் சிவா … அஜித்தின் விஸ்வாசம் படக் குழுவின் ஒரே குறிக்கோள்…)

நாளை தொடரும்…!

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Viswasam poet arun bharathi interview

Exit mobile version