விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து, விஷாலுக்காகப் பாடல் எழுதி வருகிறார் விவேக்.
இப்போதுதான் அறிமுகமானது போல் இருக்கிறது. ஆனால், அதற்குள் விவேக் பாடல் வரிகளுடன் 28 படங்கள் ரிலீஸாகிவிட்டன. அதுவும், சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் எல்லாப் பாடல்களுமே ஹிட்.
2015ஆம் ஆண்டு சித்தார்த், தீபா சன்னிதி, சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியான ‘எனக்குள் ஒருவன்’ படம்தான், விவேக் பாடல் எழுதி முதன்முதலாக ரிலீஸான படம். ஆனால், அடுத்ததாக வெளியான ஜோதிகாவின் ‘36 வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘வாடி ராசாத்தி’ பாடல்தான் அவரை வெளிச்சத்து கொண்டு வந்தது.
அதன்பிறகு, ‘இறுதிச்சுற்று’, ‘இறைவி’, ‘ஜில் ஜங் ஜக்’, ‘ஒருநாள் கூத்து’, ‘கபாலி’, ‘துருவங்கள் 16’, ‘ரெமோ’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கொடி’ உள்ளிட்ட 28 படங்களில் இதுவரை பாடல்கள் எழுதியிருக்கிறார். தற்போதும் பல படங்களில் எழுதி வருகிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் முதன்முதலாக எழுதத் தொடங்கிய விவேக், ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, ஷான் ரோல்டன், விஷால் சந்திரசேகர், ஜஸ்டின் பிரபாகரன், டி.இமான், இளையராஜா, ஜேக்ஸ் பிஜோய், அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான் என பல இசையமைப்பாளர்களின் இசைக்கு வரிகள் தந்திருக்கிறார்.
தற்போது முதன்முதலாக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதுகிறார் விவேக். விஷால் நடிக்கும் ‘இரும்புத்திரை’ படத்துக்காகத்தான் அவர் பாடல் எழுதுகிறார். மித்ரன் இயக்கும் இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.