சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் வழங்கப்பட்ட ரசீது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம், அந்த ரசீதில் "பிக் பாஸ் ஓவியாவுக்கு வாக்களியுங்கள்" என்ற வாசகம் அச்சிட்டப்பட்டிருப்பது தான்.
நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைகாட்சி ஒன்றில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியைப் பார்க்காதவர்கள் பேசாதவர்கள் இல்லவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதைப் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகம் உலா வந்து கொண்டிருக்கிறது.
"பிக் பாஸ் தமிழ்" நிகழ்ச்சியில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். ஜாக் டி மோல் உருவாக்கிய டச்சு பிக் பிரதரை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காகவே கட்டப்பட்ட ஒரு இல்லத்தில் இதன் உறுப்பினர்கள் வாழ்கின்றனர். இவர்கள் உலகின் பிற தொடர்புகளில் இருந்து தனிமைப்படுத்தப் படுகின்றனர். ஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேறுவதற்கு, அவர்களது தோழர்களில் இரண்டு பேரை ஒவ்வொருவரும் பரிந்துரைக்க வேண்டும். பெரும்பாலானோரால் பரிந்துரைக்கப்படுபவர்கள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்வார்கள். இவற்றின் இறுதியில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இந்த செயல்முறைக்கு விதிவிலக்குகளும் உண்டு. அதேபோல், பொது மக்கள் தாங்கள் விரும்பும் நபர்கள் நிகழ்ச்சியில் தொடர வாக்களிப்பர்.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே நடிகை ஓவியாவுக்கு ஆதரவாக பெரும்பாலான கருத்துக்கள் உலா வருகின்றன. பொதுமக்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் ஓவியாவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/Oviya-puratchi-padai.jpg)
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடிகை ஓவியா பெயரில் புரட்சிப் படையை தொடங்கிய அவரது ரசிகர்கள், பேனர்கள் வைத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். தவிர, சமூக வலைதளங்களில் "ஓவியா ஆர்மி" என்ற பெயரில் தனிக் குழுவே செயல்படுகிறது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஓவியாவை சுயேட்சையாக நிற்க வைத்து அவரை வெற்றி பெற வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சொல்லும் அளவுக்கு ஓவியாவுக்கு ஆதரவலைகள் சமூக வலைதளங்களில் பெருகி வருகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/Oviya-Bill.jpg)
இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் வழங்கப்பட்ட ரசீதில், ஓவியாவுக்கு வாக்கு கேட்டு வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஜோதி பிரகாஷ் (50), கூறியதாவது: பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தது முதலே ஓவியாவை பிடித்து விட்டது. அதன் பின்னர் தான், அவர் சில படங்களில் நடித்துள்ளார் என்ற விஷயம் எனக்கு தெரிய வந்தது.
விவசாயிகளை காப்பாற்றுங்கள், நீரை சேமியுங்கள் போன்ற வாசகங்களை ரசீதில் நான் அச்சிட்ட போது அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், தற்போது வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் அழைத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்றார்.