‘இன்னும் நிறைய பேசவேண்டியது வரும்’ என சூசகமாகக் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் - ரசிகர்கள் சந்திப்பு, இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த். காலை 8.20 மணி முதல் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.
நேற்று வெள்ளை நிற ஆடையில் வந்த ரஜினிகாந்த், இன்று கறுப்பு நிற ஆடையில் வந்துள்ளார். இயக்குநர்கள் கலைஞானம் மற்றும் மகேந்திரன் ஆகியோர் நேற்று ரஜினியுடன் இருந்தனர். ஆனால், இன்று ரஜினி மட்டும் தனியாக உள்ளார். இருந்தாலும், நேற்று வருகைதந்த அவர்கள் இருவருக்கும் இன்றும் நன்றி சொன்னார் ரஜினி. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்றைய ரசிகர்கள் சந்திப்பு தொடங்கியது.
இரண்டாம் நாளான இன்று பேசிய ரஜினி, “ரொம்ப கட்டுப்பாட்டோட ஒழுக்கமா இருந்தீங்க. அது எனக்கு ரொம்ப சந்தோஷம். அதே கட்டுப்பாட்டோடத்தான் நாம இருக்கணும். மறுபடியும் மறுபடியும் சொல்றேன்னு நினைக்காதீங்க. நமக்கு குடும்பம்தான் முக்கியம். தாய், தந்தையர்தான் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும். அவங்கதான் நம்முடைய முதலீடு, ஆஸ்தி. நம்முடைய சொத்தே அவங்கதான்.
ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பாருங்க, படிங்க, நினைங்க. அழிவுப்பூர்வமான விஷயங்களை மூளைக்கு கொடுக்காதீங்க. எல்லாருமே நல்லா இருக்கணும்னு சொல்லி ஆண்டவனை வேண்டிக்கிறேன். நேற்று மாதிரி போட்டோ எடுத்து மகிழ்ச்சியா போங்க. உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.
இன்னும் நிறைய பேசவேண்டிய நேரங்கள் வரும். நிறைய பேசவேண்டியது இருக்கும். பார்க்கலாம்...” என்றார்.
முன்னதாக போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ராகவேந்திரா மண்டபத்துக்குப் புறப்பட்ட ரஜினியிடம், 31ஆம் தேதி அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். “இன்னும் 4 நாட்கள் காத்திருங்கள்” என அவர்களுக்குப் பதிலளித்தார் ரஜினிகாந்த்.