“தனுஷை ஒருமுறை சந்திக்க வேண்டும்” : ரஜினிக்கு கதிரேசன் – மீனாட்சி கடிதம்

“நம் குடும்ப உறவு மேம்பட என்னையும், என் மனைவியையும் தனுஷ் ஒருமுறை நேரில் வந்து பார்த்துச் செல்ல வேண்டும்” என கதிரேசன் தம்பதி ரஜினிக்கு கடிதம்.

By: Updated: December 28, 2017, 02:46:22 PM

“நம் குடும்ப உறவு மேம்பட என்னையும், என் மனைவியையும் தனுஷ் ஒருமுறை நேரில் வந்து பார்த்துச் செல்ல வேண்டும்” என கதிரேசன் தம்பதி ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் கதிரேசன் – மீனாட்சி தம்பதி. “சின்ன வயதில் காணாமல் போன தங்கள் மகன் கலையரசன் தான் தனுஷ். தங்களுக்கு வயதாகிவிட்டதால் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்” என்று கடந்த வருடம் மேலூர் நீதிமன்றத்தில் இவர்கள் வழக்கு தொடுத்தனர். ஆரம்பத்தில் அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாத இந்த வழக்கு, ‘நீதிமன்றத்தில் நேரில் தனுஷ் ஆஜராக வேண்டும்’ என மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டதும், பரபரப்பு அடைந்தது.

‘கதிரேசன் – மீனாட்சி யார் என்றே தனக்குத் தெரியாது என்பதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தனுஷ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ‘தனுஷ் தங்கள் மகன் தான்’ என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்த தம்பதியினர், தனுஷின் அங்க அடையாளங்களையும் குறிப்பிட்டனர்.

எனவே, தனுஷ் தரப்பில் சாதகமான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், கஸ்தூரி ராஜா சமர்ப்பித்த ஆவணங்களிலும் சந்தேகம் இருப்பதாக தம்பதியினர் சந்தேகம் கிளப்ப, அங்க அடையாளத்தைச் சரிபார்க்க உத்தரவிட்டார் நீதிபதி. எனவே, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜரானார் தனுஷ்.

மதுரை மருத்துவக் கல்லூரி டீன் தலைமையிலான மருத்துவக்குழு, தனுஷின் அங்க அடையாளங்களைச் சரிபார்த்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், அங்க அடையாளங்க அழிக்கப்பட்டுள்ளது என்றொரு குண்டையும் போட்டனர் கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர். அத்துடன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டனர். இதனால், இந்த வழக்கு மிகுந்த பரபரப்பானது.

ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டிய இந்த வழக்கின் தீர்ப்பு, கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. தனுஷின் கோரிக்கையை ஏற்று, வழக்கைத் தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்றக் கிளை.

ஆனாலும், மனம் தளராத கதிரேசன் – மீனாட்சி தம்பதி, தனுஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியானவை என அக்டோபர் மாத இறுதியில் மதுரை புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கு நடவடிக்கை எடுக்கப்படாததை அடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்டோபர் மாதம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கதிரேசன், “என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறது. தனுஷிடம் இருந்து காசு, பணம் தேவையில்லை. அவர் நேரில் வந்து ஒருமுறை என் மனைவியைப் பார்த்தால் போதும், குணமாகிவிடும்” என்று கூறினார்.

கடந்த இரண்டு மாதமாக கண்டு கொள்ளப்படாத இந்த விஷயம், இன்று மறுபடியும் பரபரப்பாகி இருக்கிறது. தன்னுடைய ரசிகர்களை கடந்த 26ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில், ரஜினிக்கு கதிரேசன் தம்பதி எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“பாசமிகு உறவினர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். தங்களுடைய விருப்பமாம், நமக்கு முக்கியம் நம்முடைய தாய், தந்தை தான். அவர்கள்தான் வாழும் தெய்வங்கள். நம் குடும்பம்தான் முக்கியம் என கூறிய தங்களை மனமார வாழ்த்துகிறேன்.

நம் குடும்ப உறவு மேம்பட, நான் பெற்று வளர்த்த மகனும், தங்கள் மருமகனுமாகிய கலைச்செல்வன் என்ற தனுஷை, தனது பெற்றோராகிய என்னையும், என் மனைவி மீனாட்சியையும் வந்து ஒருமுறை பார்த்து செல்ல அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறேன். குடும்ப உறவு மேம்பட வாழ்த்துகள்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Want to meet dhanush kathiresan letter to rajinikanth

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X