தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் மைய குழு கூட்டம் (Tamil Film Chamber of Commerce - TFCC) இன்று நடந்தது. தலைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வரும் 30ம் தேதி வேலைநிறுத்தம் என்று அறிவித்துள்ளது. இது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முதல்வரை நேரில் சந்தித்து திரை உலக குறைகளை சொன்ன உடனேயே அதிகாரிகளை அழைத்து அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதனால் வரும் 30ம் தேதி மட்டுமல்ல வேறு தேதியிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர் சங்கமும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பும் வேலைநிறுத்தத்தில் பங்கு பெறமாட்டோம் என்று அறவித்துள்ளது. அதேபோல் தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது என்று முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் தலைவர் அபிராமிராமநாதன், கலைப்புலி எஸ்.தாணு, அன்புசெழியன், சரத்குமார், சேரன், ராதாரவி, எஸ் வீ சேகர், ஜேகே ரித்தீஷ், பன்னீர்செல்வம், கே முரளீதரன், சிவசக்திபாண்டியன், டி சிவா, ஏஎல் அழகப்பன், டிஜி தியாகராஜன், ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி, சித்ராலட்சுமணன், கேஎஸ் சீனிவாசன், விஜயகுமார், தனஞ்ஜெயன், பிரமிட் நடராஜன், டாக்டர் சீனிவாசன், சுந்தரேசன், மூர்த்தி உள்பட ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்ட முதல் வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு மற்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அவசர கூட்டம் நாளை நடக்கிறது.