எப்போதும் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவர், ரசிகர்களால் 'தல' என்று அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார். இதுவரை தமிழகத்தில் நடந்த எந்தவொரு முக்கிய பிரச்சனைக்கும் அவராக முன்வந்து குரல் கொடுத்தது இல்லை. 'வாழு...வாழ விடு' என்பது தான் அவரது தாரக மந்திரம் என்பது நல்ல விஷயம் தான். அஜித் உழைக்கிறார்... அவரை ரசிகர்களுக்கு பிடிக்கின்றது. மிகவும் பிடிக்கின்றது. அதனால், அவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். இது உண்மை தான். அதற்காக, தான் வாழும் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் சிரமப்படும் போது குரல் கொடுப்பது என்பது அவரது தார்மீகக் கடமை தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன்.
எங்கோ ஒரு மூலையில் வாழும் ராமசாமியும், ராமமூர்த்தியும் சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள். அதிகபட்சம் மீம் கிரியேட் செய்து சமூக தளங்களில் பதிவிட்டு, லைக், ஷேர் வாங்க முடியும், அவ்வளவுதான். நண்பர்கள், 'வாவ்.. ஐ சப்போர்ட் திஸ்' என்று ஒரு கமெண்ட் போட்டுவிட்டு அவரது அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவார். ஆனால், உங்களைப் போல பிரபலங்கள் ஒரு குரல் கொடுத்தால் போதும். ஒன்றும் பெரிதாக மாற்றம் ஏற்பட்டு விடாது. ஆனால், நமக்கென்று குரல் கொடுக்க ஒருவன் இருக்கிறான் என்ற நிம்மதியாவது மக்களுக்கு இருக்கும்.
ஆட்சி செய்யவும், சட்ட திட்டங்களை வகுக்கவும், சட்டம் ஒழுங்கை காக்கவும், மக்களுக்கு எது நல்லது எது கெட்டது என்று முடிவு செய்வதற்கு தான் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் அதற்கு ஊதியமும் பெறுகின்றனர். எனவே, அவர்கள் தான் எந்தவொரு பிரச்சனைக்கும் பொறுப்பு என்று நாம் கூறலாம். அதுதான் உண்மையும் கூட. ஆனால், அந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உண்மைக்கு மாறாக செயல்படும் பட்சத்தில் யார் தட்டிக் கேட்பது? ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் மக்களால் தண்டிக்க முடியும்? அதற்கிடையில்...? யார் போய் கேட்பது? ஒரு சாமானியன் சாதாரணமாக எம்.எல்.ஏ.வையோ, மந்திரியையோ சந்தித்துவிட முடியுமா? ஆனால், நீங்கள் நினைத்தால் முடியும். உங்களை தட்டிக் கேட்க சொல்லவில்லை. குரல் கொடுங்கள் என்று தான் சொல்கிறோம்.
இந்த நேரத்தில் பலரது மைண்ட் வாய்ஸும் யாரைப் பற்றி சிந்திக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது. அவரை விடுங்கள். அதாவது, 'போர்' வரும் வரை விட்டுவிடுங்கள். போர் வந்த பிறகு நிச்சயம் அவர் போரிடுவார் என நம்புவோம்.
இன்றையச் சூழ்நிலையில், 18 வயது முதல் 40 வயது வரையில் உள்ள பெரும்பாலானோர் உங்களது ரசிகர்களாக இருக்கின்றனர் என்பதை மறந்துவிட வேண்டாம். வாடிவாசல் தொடங்கி நெடுவாசல் வரை எந்தவொரு முக்கிய பிரச்சனைக்கும் உங்களது குரல் மௌனமானதாகவே இருந்திருக்கிறது. இப்போது உங்கள் சினிமாத் துறையே 'இரட்டை வரி' எனும் பிரச்சனையால் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. இப்போதும் நீங்கள் மவுனம் காத்தால், நிச்சயம் இளைஞர்கள் இடையே உங்கள் மீதிருந்த நம்பிக்கை சற்று தளரும் என்பது தான் உண்மை.
நீங்கள் படங்களில் அவர்களுக்கு கொடுக்கும் தைரியத்தை நேரிலும் விதையுங்கள். அப்படி உண்மையாக நீங்கள் குரல் கொடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், ஒட்டுமொத்த இளைஞர் படையும் உங்கள் பின் அணிவகுத்து நிற்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.