Bigg Boss 4 Tamil Bala Rio Ramya Som : ‘ஐ அம் வாட்சிங்’ என்று சொல்லிவிட்டு கமல் பார்க்கிறாரோ இல்லையோ, நம்ம பயபுள்ளைக ஒரு நொடி வேஸ்ட் செய்யாமல் ‘வாட்ச்’ செய்தனர் என்று சொன்னால் நிச்சயம் அது மிகையாகாது. அந்த அளவிற்கு ட்ரோல், மீம்ஸ் என இந்த பிக் பாஸ் சீசன் போட்டியாளர்களை ஒருவழி செய்துவிட்டனர். பாலா, ரம்யா, ரியோ ஆகியவர்களின் குறைகளை மிகைப்படுத்தியதும் ஆரி மீதான குறையை சுருக்கியதும் இந்த ட்ரோல்கள் என்றும் சொல்லலாம். அப்படி என்ன தவறு செய்தார்கள் மற்ற போட்டியாளர்கள்? அலாசுவோமா!
முதல் நாளிலிருந்து எந்த ஒரு பெரிய கன்டென்ட்டும் கொடுக்காமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவர்களில் சோம் சேகரும் ஒருவர். ஆரம்பக் காலகட்டத்தில் மிகவும் பாசிட்டிவ்வாகவே இருந்தவர் நாளடைவில் அர்ச்சனாவின் என்ட்ரிக்கு பிறகு ஒரு பக்கத்தை மட்டுமே சார்ந்து இருப்பதுபோல் தென்பட்டது. பேசும்போது திணறும் குறையைப் பல இடங்களில் நம்பிக்கையோடு கையாண்டிருக்கிறார். இந்தக் காரணத்தால்தான் தான் அதிகம் பேசுவதில்லை என்பதையும் பலமுறை பதிவு செய்திருக்கிறார் சோம். என்றாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் அதெல்லாம் செல்லுபடியாகாதே! எதிர்மறையான விருப்பங்கள் இல்லாமல் இருந்தது மட்டுமே சோம் சேகர் 90 நாள்களைக் கடந்ததற்கான காரணம். எனினும் அதிர்ஷ்ட காற்று பலமாக சோம் பக்கத்தில் வீசியதால், டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கை வென்று, முதல் ஃபைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டார் சோம். எதிர்பார்த்ததைப்போலக் குறைந்த வாக்குகளைப் பெற்று இறுதி நாளில் முதலாவதாக வீட்டைவிட்டு வெளியேறினார். சோம் சேகரை மறந்தாலும் நிச்சயம் அவர் வளர்க்கும் ‘குட்டு’ அவ்வளவு சீக்கிரம் யார் மனதையும் விட்டுப் போகாது.

ரம்யா பாண்டியன் என்கிற பெயர் பிக் பாஸ் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது என்கிற தகவல் வெளியானதிலிருந்து நிச்சயம் ரம்யாதான் வின்னர் என்கிற முடிவுக்கு மக்கள் பலரும் வந்தனர். வீட்டிற்குள் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்கூட ‘ரம்யா வெற்றியாளர்’ எனப் பலமுறை பதிவு செய்திருக்கின்றனர். இதனால்தான் என்னவோ இந்த சீசன் முழுவதிலும் மிகவும் கூலாக வேடிக்கை பார்த்துக்கொண்டும் மற்றவர்களைக் கிண்டல் அடித்துக்கொண்டும் என்றென்றும் புன்னகையோடு இருந்தார் ரம்யா. ஆனால், ஒரு கட்டத்தில் அந்தப் புன்னகை விஷச் சிரிப்பு பலரின் கண்களுக்குத் தெரிந்தது. ‘தந்திரமாக விளையாடுகிறார்’ என்பதிலிருந்து ‘மோசமாக விளையாடுகிறார்’ என்கிற நிலைக்கு ரம்யா தள்ளப்பட்டார். இதற்கு முக்கியக் காரணம், தான் நடுநிலையாக இருப்பதாகக் கூறி பாலா பக்கமே தலைசாய்த்ததுதான். ஆரி இல்லாத நேரத்தில் ஆரியைப்பற்றிப் புறம்பேசியது, ரம்யாவின் பெயரை டோட்டல் டேமேஜ் ஆக்கியது. ‘குக் வித் கோமாளியில்’ சம்பாதித்த நற்பெயர் அனைத்தும் பிக் பாஸ் இறுதி நாள்களில் முழுவதுமாய் போனது. தப்பித்த தவறி ஃபைனல்ஸ வரை வந்துவிட்டார். ஆனால், நிச்சயம் ஜெயிக்க மாட்டார் என்பது தெரிந்த ஒன்றே! அதனால், ரம்யா இரண்டாவதாக வீட்டைவிட்டு வெளியேறியது பலருக்கு நிம்மதியே கொடுத்தது எனலாம். ரம்யாவைவிட நிச்சயம் சனம் ஷெட்டி, அனிதா சம்பத் அல்லது கேபி ஃபைனல்ஸ் வரை சென்றிருந்திருக்கலாம் என்பதே பலரின் மைண்ட் வாய்சாக இப்போது இருக்கிறது.

தொகுப்பாளராக இருந்த நாள்களில் இருந்தே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் ரியோ. எனவே, அவர் மீது அதீத அன்பும் நம்பிக்கையும் மக்களிடத்தில் இருந்தது. சொல்லப்போனால் முதல் மூன்று வாரங்கள் வரை ரியோவிற்கான ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. ஆனால், அர்ச்சனா உள்ளே வந்த நொடியிலிருந்து, ரியோ என்கிற பக்கா என்டெர்டெயினரை காணவில்லை. ‘க்ரூப்பிசம்’ என்கிற பெயரைக் கேட்டாலே வெறுப்பாகும் ரியோ, அதனை பாசிட்டிவ்வாக ஒரு இடத்தில்கூட தெரியப்படுத்தவில்லை. க்ரூப்பிசம் ஒன்றும் அவ்வளவு பெரிய தப்பில்லையே. அதனை எந்த வகையில் சரியாகக் கொண்டு செல்கிறோம் என்பதில்தான் சவால் இருக்கிறது. கடந்த சீசன் சாண்டி மாஸ்டரைபோல் முழுநேர என்டர்டெயினராக இருப்பர் என்று எதிர்பார்ப்பைத் தவிடுபொடியாக்கிவிட்டார். இந்த ஏமாற்றமே ரியோவிற்கு குறைவான வாக்குகளை வழங்கியது. இறுதி நாள்களில் இருந்ததைப்போல் கொஞ்சம் தெளிவாகவும் இயல்பாகவும் சீசன் முழுவதும் இருந்திருந்தால், நிச்சயம் இந்த சீசனில் டஃப் மற்றும் மறக்க முடியாத போட்டியாளராக ரியோ வலம்வந்திருப்பார்.

ஒன்றா இரண்டா.. பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் எண்ணிலடங்காதது. ஆனால், எப்படி இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பதுதான் கேள்விக்குறி. கடந்த சீசனில் சரவணன், மதுமிதாவிற்கு என்ன ஆனது என்று இதுவரை யாருக்கும் தெரியாது. அவ்வளவு பெரிய குற்றம் செய்தார்களா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஆனால், கண்முன்னே அதனை அநியாயங்கள் நடந்தும் வார்னிங்கூட இல்லாமல், இறுதிச் சுற்று வரை வந்து இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறார் பாலாஜி முருகதாஸ்.

என்ன கொடுமை சார் இது! தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்தது முதல் வன்முறையில் இறங்கியது வரை எத்தனையோ தவறுகள் இருந்தும், வாக்குகளில் முன்னேற்றம்தான் இருந்ததைத் தவிர, பின்னடைவு இல்லை. ஆரிக்கு அடுத்த நிலையில் தொடர்ந்து வெகு நாட்களாக இருந்தது பாலாதான். என்னதான் பாலா இரண்டாவது நிலையில் இருந்தாலும், இவருடைய வெற்றியைப் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“