/indian-express-tamil/media/media_files/2025/09/23/anushka-2025-09-23-18-44-00.jpg)
இந்திய சினிமாவில், குறிப்பாக தென்னிந்தியத் திரையுலகில், நாயகர்களுக்கு இணையான புகழ் பெறுவதும், தொடர்ந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதும், ஒரு நாயகிக்கு எப்போதுமே சவாலான ஒரு விஷயம். குறிப்பிட்ட வயதுக்கு பிறகு முன்னணி நாயகர்கள் சூப்பர் ஸ்டார்களாக ஜொலிக்க முடியும். ஆனால், நாயகிகளுக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அரிது. இந்த பொதுவான விதியை உடைத்து, தனது திறமையாலும், துணிச்சலான முடிவுகளாலும் தன்னை ஒரு தனித்துவமான ஆளுமையாக நிரூபித்திருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.
ஒரு காலத்தில் யோகா ஆசிரியராக இருந்து, பின்னர் சினிமா உலகிற்குள் நுழைந்த அனுஷ்கா, தனது பயணத்தில் பல மைல்கற்களைப் பதித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழித் திரையுலகிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி, தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கிக் கொண்டார். தமிழில் ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி போன்ற பெரிய நட்சத்திரங்களுடனும், தெலுங்கில் நாகார்ஜுனா, பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா போன்ற முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து, ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.
தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான 'ரெண்டு' திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். அதன் பிறகு 'வேட்டைக்காரன்', 'சிங்கம்', 'தெய்வத்திருமகள்', 'வானம்', 'லிங்கா' போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஆனால், அவருக்கு பரவலான அங்கீகாரத்தையும் தனித்துவத்தையும் பெற்றுத் தந்த படம் 'அருந்ததி'. இந்தத் திரைப்படம் அனுஷ்காவின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியது. இருப்பினும், உலக அளவில் அவரை பிரபலமடையச் செய்தது, 2015-ல் வெளியான பிரம்மாண்ட காவியமான 'பாகுபலி' தான். இந்தப் படம் அவரை ஒரு பான் இந்தியா ஸ்டாராக உயர்த்தியது.
'இஞ்சி இடுப்பழகி' திரைப்படம் மூலம் ஒரு துணிச்சலான முடிவை எடுத்த அனுஷ்கா, தனது உடல் எடையை ஒரு கதாபாத்திரத்திற்காக கணிசமாக அதிகரித்தார். இது பொதுவாக நாயகர்கள் மட்டுமே எடுக்கும் ஒரு முடிவு. உடல் பருமன் கொண்ட பெண்களின் உணர்வுகளையும், வலிகளையும் வெளிப்படுத்திய அவரது நடிப்பு, பலரது பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படம் பாராட்டுகளைப் பெற்றாலும், அதன் பிறகு அவரது சினிமா வாய்ப்புகள் குறைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அவரது அடுத்த படமான 'பாகுபலி 2' இந்திய சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் ஒன்றாக மாறி, அவரது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.
சினிமாவில் நுழைவதற்கு முன்பு, பெங்களூரில் ஒரு யோகா ஆசிரியராகப் பணியாற்றிய அனுஷ்கா, தற்போது 40 வயதைக் கடந்த பின்னரும் முன்னணி கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழிலும் தெலுங்கிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது மலையாளத் திரையுலகில் கதனார்: தி வைல்ட் சார்சரர் ('Kathanar: The Wild Sorcerer') என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.