உலகம் முழுக்க எந்த மொழியாக இருந்தாலும் சரி... வெள்ளிக்கிழமையில் தான் ஒரு திரைப்படம் ரிலீசாகும். அது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், அரபி என எந்த மொழிப்படமாக இருந்தாலும், அவை வெள்ளியன்றே ரிலீசாகும். ஹிட்டோ, ஃபிளாப்போ... அது அடுத்தக் கட்ட விஷயம்.
ஆனால், தமிழ் சினிமாத்துறையில் இப்போதெல்லாம் வியாழன் அன்று படங்கள் வெளியாவதை நம்மால் காண முடிகிறது. நடிகர் அஜித், சாய்பாபா மீது பக்தி கொண்டிருப்பதால் தனது படங்களை வியாழன் அன்று ரிலீஸ் செய்வதில் அவர் அதிகம் ஆர்வம் காட்டுவார். ஆனால், அதைத் தாண்டி வேறு சில படங்களும் வியாழன் அன்று ரிலீஸ் செய்யப்படுகின்றன. இன்றுகூட, விஷாலின் 'துப்பறிவாளன்' திரைப்படம் ரிலீசாகியுள்ளது.
பொதுவாக, படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கடவுள் நம்பிக்கை என்பது அதிகமாக இருக்கும். இதனால் அஷ்டமி, நவமி தவிர்க்கணும்... நல்லநாள் பார்த்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக புதன், வியாழன் என்று ரிலீஸ் செய்கிறார்கள்.
இதனால் பெரிய நடிகர்களின் படங்களுக்கு வேண்டுமானால் நல்ல ஓப்பனிங் கிடைக்கலாம். ஆனால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு வியாபார ரீதியாகப் பாதிப்புகள் தான் அதிகம்.
"வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் படங்கள், ஒருநாள் முன்னரே ரிலீஸ் செய்தால், வியாபாரம் அதிகரிக்கத்தானே செய்யும்?" என்று நாம் கேட்கலாம். ஆனால் உண்மை என்னவெனில், முன்பு வெள்ளிக்கிழமை ஒரு படம் ரிலீஸ் ஆனது என்றால், அது அடுத்த வாரம் வியாழக்கிழமை வரைக்கும் ஓடும். மொத்தம் 7 நாட்கள் படம் வசூல் செய்யும். ஆனால், வியாழக்கிழமை ரிலீஸ் செய்வதால், போன வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன படங்களை எல்லாம் புதன்கிழமை வரைதான் தியேட்டரில் ஓடுகிறது. மொத்தமாகவே ஆறு நாட்கள் தான். ஒருநாள் வசூல் பாதிக்கிறது. இதனால், வியாழன் அன்று ரிலீஸ் செய்வது நல்ல விஷயம் கிடையாது என்பதே சினிமாத் துறையைச் சார்ந்த பலரது கருத்தாக உள்ளது.
எது எப்படியோ... எந்த நாள் படம் ரிலீசாக வேண்டும் என்பது அந்தந்த படத் தயாரிப்பாளர்களின் உரிமை. அவர்கள் தான் அந்த தேதியை முடிவு செய்ய முடியும். வியாழன் அன்று படத்தை வெளியிடுவதால் வழக்கமான முறை மாறிவிடாது. அதேபோல், ரஜினி, அஜித், விஜய் போன்ற சில முன்னணி நட்சத்திரங்களின் படம் எப்போது ரிலீசானாலும் மிகப்பெரிய ஒப்பனிங் இருக்கும் என்பது உண்மை.
ஆக மொத்தம், பலரது கடும் உழைப்பாலும், கற்பனை திறமையாலும் உருவாகும் திரைப்படம், தேதி மாற்றம் என்ற ஒரு காரணத்தினால் மக்களால் அங்கீகரிக்கப்படாமல் சென்றுவிடக் கூடாது என்பதே ஒவ்வொரு சினிமா காதலனின் எண்ணமாக உள்ளது.