Advertisment

கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ஏன் இத்தனை பிரச்சனைகள்?

கவுதம் வாசுதேவ் மேனன் படத்தில் வேலை செய்தால் சம்பளத்துக்கு உத்தரவாதமில்லை என்று வெளிப்படையாக பேசுமளவுக்கு நிலைமை கைமீறியிருக்கிறது.

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
gautammenon

பாபு

Advertisment

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், கவுதம் வாசுதேவ மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்டுடன் இணைந்து நரகாசுரன் படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இந்நிலையில் கார்த்திக் நரேன் வெளியிட்ட சில ட்விட்டர் பதிவுகள் சர்ச்சையை கிளப்பின.

'தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன் யோசியுங்கள். தவறாக நம்பிக்கை வைத்தால் உங்கள் கனவுகள் சிதைந்து போவதை உங்கள் கண்ணால் காண நேரிடும்' என முதல் ட்வீட் பொத்தம் பொதுவாக அமைந்திருந்தது. அதை வைத்தே அவர் கௌதமைதான் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை சுலபமாக யூகிக்க முடிந்தது.

இன்னொரு ட்வீட்டில், 'பலர் அறிவுரை கூறினபோதும் உங்களை (கவுதமை) நம்பினேன். என்னை நீங்கள் குப்பை போல நடத்துனீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியிருந்தது. தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்' என நேரடியாக கவுதமை குற்றம்சாட்டியிருந்தார்.

இவற்றிற்கு கவுதம் நீண்ட விளக்கம் அளித்தார். அது போரடிக்கிற ஒரு மழுப்பல் விளக்கம். அதை கவுதமே அறிவார். கவுதமை அறிந்தவர்களும் அறிவர்.

கார்த்திக் நரேனுடனான கவுதமின் பிரச்சனையை முன்வைத்து யார் சரி, யார் தப்பு என்று அளவிடுவது அல்ல இப்போது முக்கியம். கவுதம் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகளின் ஒரு பகுதியே இது. ஏன் இத்தனை பிரச்சனைகள், எதற்காக இந்தப் பிரச்சனைகள்...? அதுவே அலசப்பட வேண்டியது.

கவுதம் இருவகையான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். சரியாகச் சொன்னால் உருவாக்குகிறார். ஒன்று இயக்குனராக, இன்னொன்று தயாரிப்பாளராக.

2001 வெளியான தனது முதல் படம் மின்னலேயிலேயே கவுதம் கவனிக்கப்பட்டார். விஷுவலாக சினிமாவை பார்க்கக் கூடிய இயக்குனர் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. காக்கா காக்க படத்தில், ரவுடிகளை விசாரிக்க தேவையில்லை, ஐம்பது ரூபாய் துப்பாக்கி குண்டால் போட்டுத்தள்ளினால் போதும் என்ற அதிகாரத்தின் வன்முறை ஓங்கி ஒலித்தாலும், கதை சொல்லும்விதத்தில் கௌதம் கவர்ந்தார். வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், 2010 வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா வரை பிரச்சனையில்லை. அதேநேரம் இந்தப் படங்களிலேயே அவர் ஏற்கனவே சொன்ன கதையை, காட்சியை மறுபடி மறுபடி எடுக்க ஆரம்பித்திருந்தார். காதலியைத் தேடி அமெரிக்காவுக்கோ அம்பாசமுத்திரத்துக்கோ அவரது நாயகன் சென்று கொண்டேயிருப்பான். போலீஸ் கதையில் நாயகனின் மனைவி அல்லது காதலி கொல்லப்படுவாள்.

இயக்குனராக கவுதமின் பிரதானப் பிரச்சனை அவர் முழுமையாக திரைக்கதை எழுதுவதில்லை. மனதில் ஒரு பொறி அகப்பட்டதும் (அல்லது அகப்பட்டதாக தோன்றியதும்) மேலோட்டமாக சில காட்சிகளை மனதுக்குள் வரைந்து படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுவார். காட்சிகளை எடுக்க எடுக்க அடுத்தடுத்த காட்சிகளை அதற்கேற்ப கோர்ப்பார். இதன் காரணமாக அவருக்கு தெரிந்த, காதலியைப் பார்க்க கிளம்பிப் போவது, பிரச்சனை வந்ததும் நாயகன் உலகம் சுற்ற கிளம்புவது, போலீஸ்காரன் மனைவியை வில்லன் போட்டுத்தள்ளுவது என்று மறுபடிமறுபடி ஒரே காட்சிகளே அனைத்துப் படங்களிலும் இடம்பெற்றன.

விஜய்யை வைத்து யோஹன் - அதிகாரம் ஒன்று படத்தை கவுதம் அறிவித்தார். அப்போதும் முழுமையான கதையை கூறாமல் மேலோட்டமாக கதையை கூறியதால் விஜய் திருப்தியின்றி படத்திலிருந்து விலகினார். சூர்யா அவரது துருவநட்சத்திரம் படத்தில் நடிக்க முன்வந்தார். ஒரேயொரு நிபந்தனை மட்டுமே விதித்தார். படப்பிடிப்புக்குமுன் முழு ஸ்கிரிப்டையும் தர வேண்டும். பூஜை போட்டார்கள். கடைசிவரை முழுக்கதையையும் கவுதம் கூறவில்லை, சூர்யா விலகினார். காக்கா காக்க படத்தின் கதையையும் நான் முழுசாக எழுதவில்லை. படம் ஹிட்டாகவில்லையா என்பது கவுதமின் கேள்வி. ஒரு இயக்குனரின் மனதில் ஒன்றிரண்டு கதைகள் இருக்கலாம். அதை அவர்கள் எழுதாமலே எடுக்கலாம். ஆனால், சரக்கு தீர்ந்த பிறகு உட்கார்ந்து யோசிக்க வேண்டும், எழுத வேண்டும். கவுதம் செய்வதில்லை.

தயாரித்த படங்களும், இயக்கிய படங்களும் பெருத்த நஷ்டமடைய சிம்புவை சரணடைந்தார் கவுதம். விண்ணைத்தாண்டி வருவாயா நன்றிக்கடனுக்காக சிம்பு நடிக்க சம்மதித்தார். அந்தநேரம் அஜித் அழைத்து என்னை அறிந்தால் வாய்ப்பை தந்தார். மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால், கவுதம் அப்போதும் முழு திரைக்கதையை எழுதாமலே படப்பிடிப்புக்கு சென்றார். போலீஸ்காரனின் காதலியான நாயகி இதிலும் கொல்லப்பட்டாள். பிரச்சனையிலிருந்து விலகியிருக்க இந்தப் படத்தின் நாயகனும் ஊர் சுற்ற கிளம்பினான். முதல் பகுதியை எப்படியோ ஒப்பேற்றினார். இரண்டாம் பாதியில் பெரும் தடுமாற்றம். கடைசியில் இயக்குனர்கள் தியாகராஜன் குமாரராஜா, ஸ்ரீராம் ராகவன் ஆகியோருடன் கலந்தாலோசித்தார். அவர்கள் சொன்ன அறிவுரையின்படி என்னை அறிந்தால் படத்தின் இறுதிப்பகுதி உருவானது. அந்தப் படத்தைப் பார்த்தால் தெரியும். இரண்டாம் பாதியில் டல்லடிக்கும் படம் கிளைமாக்ஸை நெருங்குகையில் வேகமெடுக்கும். அதுதான் என்னை அறிந்தால் படத்தை காப்பாற்றியது. அது தியாகராஜன் குமாரராஜா, ஸ்ரீராம் ராகவன் இருவரின் பங்களிப்பு.

என்னை அறிந்தால் படம் நஷ்டமில்லை. அதேநேரம் லாபமும் இல்லை. எப்படியோ தப்பிப் பிழைத்தது. தனது பிழையை உணராமல், என்னை அறிந்தால் படத்தின் கதையை முழுமையாக எழுதாமல்தான் படப்பிடிப்புக்கு போனேன். படமாக்கிய காட்சிகள் தந்த 'மூடை' வைத்து அடுத்தடுத்த பகுதிகளை படமாக்கினேன் என்று தனது பலவீனத்தை பலமாக காட்டினார்.

அடுத்து இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் இரண்டாம் பாதியில் ஏன் இத்தனை கொலைகள் எதற்கு இந்த சண்டை என்று பார்வையாளர்கள் தலையை பியத்துக் கொள்ளாத குறை. படம் பார்த்த நண்பர், 'கவுதம் படத்தை எடுத்து ஆண்டனிகிட்ட கொடுத்திருப்பார். அவர் பார்த்திட்டு படத்துல கதை எங்கன்னு கேட்டிருப்பார். அப்புறமாத்தான், அடடா அதை விட்டுட்டோமேன்னு கிளைமாக்ஸ்ல சிம்பு போலீஸ் ஆபிசரா வந்து அதுவரை நடந்தது எதுக்குன்னு விளக்கம் கொடுக்கிற காட்சியை படமாக்கியிருப்பார்' என்றார். அப்படித்தான் படம் இருந்தது. நாயகன் நாயகியை பார்ப்பான். பின்னணியில் அவன் குரலில் அவளைப் பற்றிய வர்ணனை வரும். இல்லை நண்பர்களிடம் அவ எப்படித் தெரியுமா என்று வசனம் பேசுவான். காட்சி சம்பவம் எதுவுமில்லை. காக்கா காக்க படத்தில் நாயகன் முதலில் அவளது பெயரை கேட்பான் சொல்ல மாட்டாள். போலீசாக கேட்கும்போது அனைத்தையும் சொல்ல வேண்டிவரும். பிறகு நாயகி ஒரு உதவி கேட்பாள். நாயகன் ஆசிட் அடிப்பேன் என்பவனை துணிந்துபோய் எதிர்த்து அடிப்பான். நாயகிக்கு அவன் மீது நம்பிக்கை வரும். இதில் சம்பவம் இருக்கிறது, ஒரு சீக்வென்ஸ் உருவாகிறது. அச்சம் என்பது மடமையடா படத்தில் ஒதுபோல் ஒரு காட்சி, ஒரு சம்பவம், ஒரு சீக்வென்ஸ்...? ம்ஹும் எதுவுமில்லை.

முழுமையான திரைக்கதையை எழுதாமல் வாய்ஸ் ஓவரை வைத்து படத்தை இட்டு நிரப்பும் தவறை கவுதம் தொடர்ந்து செய்தால் அவரது படங்கள் தொடர் தோல்விகளை சந்திப்பதை தடுக்க முடியாது. இது இயக்குனராக கவுதம் உருவாக்கிக் கொள்ளும் பிரச்சனை.

2010 இல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு கவுதம் வெப்பம், நடுநிசி நாய்கள் படத்தை தயாரித்தார். வெப்பத்தை அவரது உதவி இயக்குனர் அஞ்சனா இயக்கினார். நடுநிசி நாய்களை கௌதம். இரண்டும் அட்டர் பிளாப். பெரும் கடன். அந்நிலையில் ராமின் தங்கமீன்களை தயாரித்தார். படம் தயாராகி இரண்டரை வருடம் கழிந்த பின்பே திரைக்கு கொண்டுவர முடிந்தது. 2012 இல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ஏக் தீவானா தா என்ற பெயரில் இந்தியில் தயாரித்தார். படம் பிளாப். அதேவருடம் வெளியான நீதானே என் பொன்வசந்தம் படமும் தோல்வி. அவர் தயாரித்த மற்றுமொரு படம் தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் பல வருடங்கள் கழிந்த பின்பே திரைக்கு வந்து, வந்த உடனே பெட்டிக்குள் முடங்கியது. சுற்றிலும் கடன். செலவுக்கே பணமின்றி சிம்புவிடம் வாங்கியதாக கவுதமே குறிப்பிட்டுள்ளார்.

என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகாவது தயாரிப்பை கைவிட்டிருக்க வேண்டும். செய்யவில்லை. அச்சம் என்பது மடமையடா படத்தை தயாரித்தார். அதனுடன் குறும்படங்கள், வெப் சீரிஸ்... ஒரு படத்தை முடிக்க இன்னொரு படத்தை தொடங்குவது, அதன் பணத்தை இதில் போடுவது, சம்பளம் தராமல் இழுத்தடிப்பது என்று கவுதம் தனது தயாரிப்பு ஆசையால் பெயரை கெடுத்துக் கொண்டார். ஹாரிஸுடனான அவரது நட்பு பிரச்சனைக்குள்ளானதற்கும் பணம் ஒரு காரணம். அச்சம் என்பது மடமையடா பாடல் காட்சியில் சிம்பு நடிக்காமல் தாமதம் செய்ததற்கும் சம்பளமே காரணம். துருவநட்சத்திரம் படத்திற்காக விக்ரமுக்கு சம்பளம் இன்னும் தரப்படவில்லை என்கிறார்கள். கவுதம் படத்தில் வேலை செய்தால் சம்பளத்துக்கு உத்தரவாதமில்லை என்று வெளிப்படையாக பேசுமளவுக்கு நிலைமை கைமீறியிருக்கிறது. நரகாசூரன் படத்தில் கௌதம் ஒரு பார்ட்னர். ஆனால், படப்பிடிப்பு செலவு பெருமளவை கார்த்திக் நரேனே ஏற்றுக் கொண்டிருக்கிறார். கவுதம் நரகாசுரனை காட்டி பல கோடிகள் வெளியே பணம் புரட்டியதாக கூறுகிறார்கள். அந்த பணத்தை அவர் துருவநட்சத்திரத்தில் முதலீடு செய்திருக்கிறார். நரகாசூரனில் நடித்ததற்கான சம்பள பாக்கியை கவுதம் செட்டில் செய்யாததால் அரவிந்த்சாமி இன்னும் டப்பிங் பேசவில்லை. இந்த விவகாரத்தில் கவுதம் அளித்த நீண்ட விளக்கத்தை அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார். தயாரிப்பாளர் கவுதமின் தோல்விகளும், கடன் தொல்லைகளும், இயக்குனர் கவுதம் சம்பாதித்த நற்பெயரை எப்போதோ குலைத்துவிட்டன.

இயக்குனர் கவுதம் செய்ய வேண்டியது, முழுதிரைக்கதையும் எழுதிய பின் படப்பிடிப்புக்கு செல்வது. தயாரிப்பாளர் கவுதம் செய்ய வேண்டியது, ஒரு லாபகரமான படத்தைக்கூட இதுவரை எடுக்க முடியாத தான், தயாரிப்பாளர் என்ற முள்கிரீடத்தை நிரந்தரமாக கழற்றி வைப்பது.

இந்த இரண்டும் நடைமுறைக்கு வராதவரை வாரணம் ஆயிரமாக பிரச்சனைகள் கவுதமை வேட்டையாடிக் கொண்டிருக்கும்.

Tamil Cinema Gautham Vasudev Menon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment