‘நயன்தாரா படத்துக்கு ஏன் இவ்வளவு கூட்டம் வருதுனு தெரியுமா?’ என கேள்வி எழுப்பியுள்ள அபிராமி ராமநாதன், அதற்கான பதிலையும் தெரிவித்துள்ளார்.
அருண்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆறாம் திணை’. இந்தப் படத்தில் விஜய் டி.வி. வைஷாலினி கதையின் நாயகியாக நடிக்க, கதையின் நாயகனாக மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். ரவிமரியா, லாவண்யா, ‘கலக்கப்போவது யாரு’ குரேஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராஜ் கே சோழன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, கவிஞர் சினேகன், அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய அபிராமி ராமநாதன், “பேய் இருக்கா, இல்லையானு கேட்டா... இருக்குனு தான் சொல்வேன். அமானுஷ்யம்னா அது பேயா இல்ல முனியா எதுவோ ஒண்ணு இருக்குங்க. மனுஷனால எதைப் பார்க்க முடியாதோ, அதைப் பார்க்கத்தான் ஆசைப்படுவான். இல்லேன்னா நயன்தாரா படத்துக்கு ஏன் இவ்வளவு கூட்டம் வருது?
கடந்த வருடத்தில் நான் 50 படங்களை வாங்கி விநியோகித்தேன். அதில் 45 படங்கள் சின்ன படங்கள்தான். இன்றைக்கு விஜய் பெரிய ஹீரோவாக இருந்தாலும், அவர் முதன்முதலா நடித்தபோது அது சின்ன படம்தான். எங்களைப் போன்ற தியேட்டர்காரர்கள் அது சின்ன படம் என்று புறக்கணித்திருந்தால், விஜய் இன்றைக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியுமா?
சில சின்ன படங்களை, 15 பேர் கூட தியேட்டருக்கு வந்து பார்ப்பதில்லை. இதனால், ஏ.சி. போடும் காசு கூட எங்களுக்கு கிடைப்பதில்லை. எனவே, அந்த படத்தை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. சமீபத்தில் ‘அருவி’னு ஒரு சின்ன படம் ரிலீஸாச்சு. ஆனால், முதல் நாள்ல இருந்து நல்ல கூட்டம். அந்தப் படத்துக்கு மட்டும் கூட்டம் எப்படி வந்துச்சு? அந்த வித்தை மட்டும் எங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, அத்தனை சின்ன படங்களையும் ஓட வச்சிருப்போம். அந்த சக்சஸ் ஃபார்முலாவை முதல்ல கண்டிபிடிங்க” என்றார்.
படக்குழுவினரை வாழ்த்திப் பேசிய ஆரி, “இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அதற்காக ஆர்.கே. நகர் அளவுக்கு வெற்றி பெறுமா என்று கேட்காதீர்கள். அது மாயாஜால வெற்றி. ஆர்.கே.நகருக்குள் உள்ள கடைகளில் 20 ரூபாய் நோட்டைக் கொடுத்தாலே கடைக்காரர்கள் மிரளுகிறார்கள். எனக்குத்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுப்போடும் பாக்கியம் கிடைக்கவில்லை.
சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி பகுதிகளுக்குச் சென்றுவந்தேன். பலருக்கு சின்னதாக உதவிகள் செய்வதைவிட, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். இதேபோல் ஒவ்வொருவரும் முன்வந்தால், பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். கடலுக்குள் செல்லும் மீனவர்களைக் கண்காணிக்க, காணாமல் போனால் தேடுவதற்கு வெளிநாடுகளில் எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அவற்றை இங்கேயும் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.
இயக்குநர் பேரரசு, “உண்மையிலேயே பேய் இருக்கு. பதவிப்பேய், பணப்பேய், ஜாதிப்பேய், மதப்பேய், காமப்பேய்... இப்படி பல பேய்கள் நமக்குள்ளேயே இருக்கின்றன. ஐந்தாறு வருடங்களாக இந்த சினிமாவையும் பேய் பிடித்திருக்கிறது. ஆனால், இது சினிமாவை வாழவைக்கும் நல்ல பேய்” என்று தன்னுடைய ஸ்டைலில் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.