நாட்டுப்பற்றை வளர்ப்பதற்காக தியேட்டர்களில் படம் போடுவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இந்த உத்தரவுக்குப் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. ஆனாலும், தன் உத்தரவில் உறுதியாக இருந்தது மத்திய அரசு.
தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்பது விதி. ஆனால், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எழுந்து நிற்க முடியாது என்பதால், அவர்களுக்கு மட்டும் எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்துநின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஒருவர் எழுந்து நிற்கவில்லை என்றால், அவருக்குத் தேசபக்தி குறைவு என்று அர்த்தமில்லை.
பொழுதுபோக்கிற்காக மக்கள் தியேட்டர்களுக்கு செல்கின்றனர். தேசிய கீதத்துக்கு அவமரியாதை என்பதால், தியேட்டருக்கு டி-ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்து வருவதையும் அரசு தடுக்க வேண்டும் என்று விரும்பும். இதை அனுமதிக்க முடியாது. தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை முறைப்படுத்துவது தொடர்பாக, தேசியக்கொடி விதிகளில் திருத்தம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் தாக்கத்துக்கு உட்படாமல் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரலாம்” என்று கூறினர்.
மேலும், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இருந்த ‘இசைக்க வேண்டும்’ என்ற வார்த்தையை, ‘இசைக்கப்படலாம்’ என நீதிமன்றம் மாற்ற முடியும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ‘தியேட்டர்களில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்படுவது ஏன்?’ என அரவிந்த் சாமி கேள்வி எழுப்பியுள்ளார். “தேசிய கீதம் இசைக்கும்போதெல்லாம் நான் எழுந்து நின்று மரியாதை செய்வதோடு, கூடவே பாடவும் செய்வேன். அப்படிப் பாடும்போது பெருமிதமாக உணர்கிறேன்.
சினிமா தியேட்டர்களில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஏன் எனத் தெரியவில்லை. அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் தினமும் இசைக்கலாமே...” என ட்விட்டரில் அரவிந்த் சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.