ரஜினியின் அரசியல் தொடர்பான கருத்துகளுக்கு பின்னர், 'தமிழன் தான் தமிழனை ஆள வேண்டும்' என்ற குரல் சமூக தளங்களில் பலமாக எழத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பெரும்பாலான இளைய சமுதாயம் இந்த பதிவினை முன்னெடுத்து வைக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, மும்பையில் ரஜினிகாந்தின் 'காலா' பட ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. முதன்முறையாக ரஜினியுடனும் சரி... ரஞ்சித்துடனும் சரி... இளைஞர்களிடம் பெரும் நற்பெயரை பெற்றிருக்கும் சமுத்திரக்கனி இவர்கள் இருவருடனும் கைக்கோர்த்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/05/a390-300x217.jpg)
இதில், ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லைதான். ஆனால், ஜல்லிக்கட்டு விவகாரம் உள்ளிட்ட பொதுப் பிரச்சனைகள் பலவற்றில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சமுத்திரக்கனி. இயக்குனர் பாலா, 'தொண்டன்' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய போது, "எனக்கு பெர்சனலாக பல கல்லூரிகளில் இருந்து போன் செய்து, சமுத்திரக்கனியை அவர்களது கல்லூரி நிகழ்வுகளில் பங்கேற்க வைக்குமாறு கேட்கின்றனர். ஏன்? என்றதற்கு, 'அவரது படங்களில் மாணவர்களுக்கு அறிவுறுத்துவது போன்ற நல்ல கருத்துக்கள் உள்ளது' என்கின்றனர்" என கூறினார்.
இதுபோன்று சமூக விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொள்ளும் சமுத்திரக்கனி, ரஜினியுடன் இணைந்து 'காலா' படத்தில் நடிப்பதை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது. ஏனெனில், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தினந்தோறும் பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ரஜினியை ஆதரித்தும், குறிப்பாக கடுமையாக எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் சமூக தளங்களில் உலா வருகின்றன.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'ரஜினிகாந்த் நடிகராக இருக்கட்டும். தலைவனாக மக்களுக்கு நல்லது செய்யட்டும். ஆனால், தமிழ்நாட்டை ஆள நினைக்கக் கூடாது' என்கிறார். இந்தச் சூழ்நிலையில், சமுத்திரக்கனி ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதால், இளைஞர்களின் மனநிலை என்னவாக இருக்கும்... இருக்கப்போகிறது என்பது இங்கு முக்கியம்.
சினிமாவில் இணைந்து நடிப்பது வேறு... கொள்கை வேறு என்று கூறினாலும், ரஜினியின் அரசியல் கருத்துகளுக்கு பின், சமுத்திரக்கனி அவருடன் இணைந்து நடிப்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
/tamil-ie/media/media_files/uploads/2017/05/a389-300x217.jpg)
இது ரஜினியுடன் சமுத்திரக்கனி இணைந்து நடிப்பது தவறு என்றோ, ரஜினி தமிழகத்தை ஆளக் கூடாது என்றோ, ரஜினி நல்லவர் என்றோ, சமுத்திரக்கனி முகம் மாறிவிட்டார் என்றோ கூறும் தொகுப்பு கிடையாது. யார் தமிழகத்தை ஆள வேண்டும்? என நினைப்பதில் உள்ள விடயத்தை தேடும் முயற்சியே இந்த தொகுப்பு.