இவரைப் பேசி அவரை மறந்து விடுகிறோம்.......

கிட்டத்தட்ட, நமது விக்ரமின் அந்த ஒரு 'வெறி' அவரிடம் காண முடிந்ததை மறுக்கவே முடியாது.

பாகுபலி படத்தை உலகமே தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறது. படத்தை மட்டுமல்ல பாகுபலியாக நடித்த… சாரி.. வாழ்ந்த பிரபாஸையும் தான். தந்தை, மகன் என இருவேறு உடலமைப்பில், உள்ளமைப்பில் வேறுபாடு காட்டி, மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறார் இந்த நாயகன். இந்தப் படத்திற்காக அவர் எடுத்த முயற்சியை உண்மையில் பாராட்ட வார்த்தையில்லை. கிட்டத்தட்ட, நமது விக்ரமின் அந்த ஒரு ‘வெறி’ அவரிடம் காண முடிந்ததை மறுக்கவே முடியாது.

ஆனால், நாம் காண மறந்த, அல்லது கண்டும் காணாமல் போன, அல்லது கண்டும் கதையளக்காமல் போன ஒருவரைப் பற்றியே இங்கு பேச விரும்புகிறேன். அந்த ஒருவர் ‘ராணா’.

கஷ்டப்பட்டு உழைத்து உடலை ஏற்றி படத்தில் நேர்மையானவனாகவும், தைரியசாலியாகவும் வாழ்ந்த பிரபாஸை போற்றும் நாம், அதே கஷ்டத்தை அனுபவித்து, உழைத்து, உடலை ஏற்றி படத்தில் தைரியசாலியாகவும், கெட்டவனாகவும் வாழ்ந்த ராணாவை பற்றி நாம் அதிகம் பேச மறந்துவிட்டோமா என்று தோன்றுகிறது.

படத்தில் பிரபாஸ் ஹீரோ… ராணா வில்லன்…அவ்வளவுதான் இருவருக்குள்ளான வித்தியாசம். மற்றப்படி, பிரபாஸ் எந்தளவிற்கு வியர்வை சிந்தி இப்படத்திற்காக உழைத்தாரோ, அதில் சற்றும் குறைவில்லாமல் வியர்வை சிந்தியவர் ராணா என்பது அவர் அருகில் உள்ளவர்களுக்கு தெரியும்.

ஆனால், நம் மனம் தேடுவதும், ஆச்சர்யப்படுவதும், பிரமிப்படைவதும் பிரபாஸைப் பார்த்துதான். இதனை குறையாக சொல்லவில்லை. பாகுபலி 2-ல் ராணாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கொஞ்சம் குறைவுதான். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், உழைப்பு, அர்ப்பணிப்பு என்பதை முன்னிறுத்தி விமர்சனம் செய்யும் போது, பிரபாஸை அதிகம் புகழும் நாம், ராணாவின் அர்ப்பணிப்பை, உழைப்பை கொஞ்சம் புறக்கணிப்பது என்பது முதிர்ச்சியில்லா தன்மையையே காட்டுகிறது. அதுசரி… என்ன இருந்தாலும் பிரபாஸ் தானே படத்தின் ஹீரோ…

×Close
×Close