தமிழில் ‘கத்தி’ படத்திற்குப் பிறகு முருகதாஸ் இயக்கியிருக்கும் படம் ‘ஸ்பைடர்’. தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரூ.125 கோடி ரூபாய் செலவில் பைலிங்குவலாக உருவாக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு முருகதாஸ் – ஹாரிஸ் – சந்தோஷ் சிவன் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்திருக்கிறது.
மகேஷ் பாபுவின் முதல் நேரடித் தமிழ்ப் படம் இதுதான். இதற்கு முன் அவர் நடித்த ‘ஸ்ரீமந்துடு’ படம் ‘செல்வந்தன்’ எனும் பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு அதிகளவில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், ஸ்பைடர் படத்தின் மூலம் தமிழ் திரையுலக மார்க்கெட்டில் நேரடியாக ஒரு ஸ்டிராங்கான தடத்தைப் பதிக்க முயன்றுள்ளார் மகேஷ்.
மகேஷ் பாபு சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், தமிழில் சரளமாக உரையாடக் கூடியவராகத் தான் இருக்கிறார். சிறிது ஆந்திர நெடி வீசினாலும், ரசிகர்களுக்கு தெளிவாக புரியும்படியே டப்பிங் பேசி அசத்தியிருக்கிறார்.
வரும் செப்., 27-ஆம் தேதி இப்படம் ரிலீசாகிறது. இதை முன்னிட்டு, ஸ்பைடர் படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. மகேஷ்பாபு, முருகதாஸ், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். முதல் நேரடித் தமிழ் படம் என்பதால், ஆடியோ வெளியீட்டு விழா, பிரஸ் மீட் என புரமோஷன் தொடர்பான அனைத்து நிகழ்ச்சியிலும் மகேஷ் பாபு தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.
இன்று பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசிய மகேஷ் பாபு, “தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழியும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஸ்பைடர் பட ஷூட்டிங்கின் போது, இரு மொழிகளிலும் திறம்பட பேசி நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். இயக்குனர் முருகதாசுடன் பணியாற்றியது ஒரு அற்புதமான அனுபவமாகும். நல்ல கதையும், இயக்குனரும் அமைந்தால் தொடர்ந்து நிச்சயம் தமிழில் நடிப்பதாக இருக்கிறேன்” என்றார்.
தமிழகத்தில் மட்டும் 450 திரையரங்குகளில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக லைக்கா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜு மகாலிங்கம் அறிவித்துள்ளார். தமிழில் ஒரு பெரிய ஹீரோவின் தமிழ் படத்திற்கு இணையான தியேட்டர்கள் இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.