‘விண்ணப்பித்த 68 நாட்களுக்குப் பிறகே தணிக்கை சான்றிதழ் கிடைக்கும்’ என அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ‘விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய 7 நாட்களும், ஆய்வுக்குழு அமைக்க 15 நாட்களும், ஆய்வுக்குழு அறிக்கையை தணிக்கை வாரியத் தலைவருக்கு அனுப்ப 10 நாட்களும், விண்ணப்பதாரருக்கு உத்தரவு குறித்து தெரியப்படுத்த 3 நாட்களும், நீக்கப்பட்ட காட்சிகளை தயாரிப்பாளர் ஒப்படைக்க 14 நாட்களும், நீக்கப்பட்ட காட்சிகளை ஆய்வுசெய்ய 14 நாட்களும், சான்றிதழ் வழங்க 5 நாட்களும் கால அவகாசம் ஆகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்குப்படி பார்த்தால், விண்ணப்பித்த 68 நாட்கள் கழித்தே தணிக்கை சான்றிதழ் கிடைக்கும். எனவே, முன்பு போல ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு தணிக்கை வாரியத்துக்கு அனுப்ப முடியாது. இதனால், படங்களின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும். ஆனால், இது நடைமுறைக்கு எப்போது வரும் என்று கூறப்படவில்லை.
மேலும், ‘தணிக்கை வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகளிடம் தொலைபேசி அல்லது செல்போன் மூலம் தொடர்பு கொள்ளக்கூடாது. படத்தின் தணிக்கை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், தயாரிப்பாளர்களுக்குத் தரப்பட்டுள்ள பிரத்யேக லாகின் ஐடியைப் பயன்படுத்தி இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்’ என்றும், ‘தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்கள் இருந்தாலோ அல்லது ஏதாவது தெளிவு தேவைப்பட்டாலோ அலுவலக மின்னஞ்சல் முகவரி அல்லது அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தங்களுக்கு மத்திய தணிக்கை வாரிய அதிகாரிகளுடன் நெருக்கம் இருக்கிறது. எனவே, என்னால் சீக்கிரமாகவே தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுத்தர முடியும் என்று கூறி, அதற்குப் பதிலாக பணம் தருவதாகவோ அல்லது வேறு ஏதாவது உதவி கேட்டாலோ, அதுகுறித்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் அல்லது தலைமை செயல் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம்” என்று தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ள தணிக்கை வாரியம், ‘திரைப்படத்துக்குத் தணிக்கை வழங்குவதில் எந்தவிதமான தலையீட்டையும் தணிக்கை வாரியம் ஊக்குவிக்காது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றும் கூறியுள்ளது.